லிங்கனமக்கியில் நீர்மட்டம் குறைவு மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்
லிங்கனமக்கியில் நீர்மட்டம் குறைவு மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்
ADDED : ஜூன் 27, 2026 11:11 PM

ஷிவமொக்கா: கர்நாடகாவின் முக்கியமான நீர் மின் உற்பத்தி அணையான லிங்கனமக்கியில், நீர்மட்டம் குறைந்ததால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவின், ஜோக் நீர் வீழ்ச்சி அருகில் லிங்கனமக்கி அணை உள்ளது. இது, கர்நாடகாவின் நீர் மின் உற்பத்திக்கு நீர் வழங்கும், முக்கியமான அணையாகும். இங்குள்ள மின் உற்பத்தி நிலையத்திலிருந்து, தினமும் 55 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
ஷிவமொக்கா மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவில் மழை பெய்யாத காரணத்தால், லிங்கனமக்கி அணையில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இது, மின் உற்பத்திக்கு போதுமானதாக இல்லை. அணையின் நீர் கொள்ளளவு 1,819 அடிகளாகும். தற்போது 1,743 அடிகளாக குறைந்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், மின்சாரம் உற்பத்தி செய்தால், இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படும். இதை மனதில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த, கர்நாடக மின் ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மழை பெய்து அணையில் நீர்மட்டம் அதிகரிக்கும் வரை, மின் உற்பத்தி செய்வது கஷ்டம். அணை நிரம்பிய பின், மின் உற்பத்தி துவக்குவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
