புதிதாக 256 போர்வெல்கள் தோண்ட குடிநீர் வடிகால் வாரியம் திட்டம்
புதிதாக 256 போர்வெல்கள் தோண்ட குடிநீர் வடிகால் வாரியம் திட்டம்
ADDED : மார் 15, 2026 05:31 AM
பெங்களூரு: கோடைகாலம் துவங்கியுள்ளதால், பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, குடிநீர் வடிகால் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. புதிதாக, 256 போர்வெல்கள் தோண்ட திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் மக்கள் தொகை, 1.50 கோடி. 11 லட்சத்துக்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தினமும், 2,225 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கும் திறன், குடிநீர் வடிகால் வாரியத்துக்கு உள்ளது.
கோடைகாலம் துவங்கியுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க, குடிநீர் வடிகால் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்தாண்டு கோடை காலத்தில், 'நடமாடும் காவிரி' திட்டம் செயல்படுத்தப்பட்டது. மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க, தனியார் டேங்கர் லாரிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.
இப்போது சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீருக்கும், தேவை அதிகரித்துள்ளது. சில நிறுவனங்களுக்கு இந்த நீரை வினியோகிக்க வேண்டும்.
இதற்காக, 15.33 கோடி ரூபாய் செலவிட்டு, 60 புதிய டேங்கர் லாரிகள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குடிநீர் வாரியத்தின் சொந்த டேங்கர் லாரிகளின் எண்ணிக்கை, 110 ஆக அதிகரித்துள்ளது.
குடிநீர் வாரிய கட்டுப்பாட்டில், 15,565 போர்வெல்கள் உள்ளன. அவற்றில் இருந்து, 400 முதல் 500 எம்.எல்.டி., நீர் வினியோகிக்கலாம். ஆனால், தற்போது காவிரி நீரே போதுமான அளவில் இருப்பதால் போர்வெல் நீரை அதிகம் பயன்படுத்துவது இல்லை.
வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், குடிநீர் தேவை அதிகரிக்கலாம். அப்போது போர்வெல்களின் தேவையும் அதிகரிக்கலாம்.
இதை மனதில் கொண்டு, புதிதாக, 256 போர்வெல்கள் தோண்ட, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
