/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முதல்வர் சித்தராமையாவுக்காக 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம்'
/
'முதல்வர் சித்தராமையாவுக்காக 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம்'
'முதல்வர் சித்தராமையாவுக்காக 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம்'
'முதல்வர் சித்தராமையாவுக்காக 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம்'
ADDED : ஆக 10, 2025 08:48 AM

மைசூரு : “பாதாமியில் சித்தராமையாவின் வெற்றிக்கு, 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம்,” என, முன்னாள் அமைச்சர் இப்ராகிம் தெரிவித்தார்.
மைசூரு நகரில், ராமகிருஷ்ணாவின் சாதனைகள் தொடர்பான கருத்தரங்கில், முன்னாள் அமைச்சர் இப்ராகிம் பேசியதாவது:
முந்தைய சட்டசபை தேர்தலில், பாதாமி தொகுதியில் சித்தராமையா களமிறங்கினார். அவர் தோற்கும் சூழ்நிலையில் இருந்தார். அப்போது நானும், சிம்மனகட்டியும் சேர்ந்து பணம் கடன் பெற்று, 3,000 ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம்.
ஓட்டு எண்ணிக்கை நடந்த நாளன்று, சித்தராமையா கிலியில் இருந்தார். நான் அவருக்கு தைரியம் கூறினேன். '800 முதல் 1,000 ஓட்டுகள் வித்தியாசத்திலாவது வெற்றி பெறுவீர்கள்' என, கூறினேன். அதன்படி அவர் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிந்த ஆறு மாதங்களுக்கு பின், நாங்கள் வாங்கிய கடன் தொகையை, சித்தராமையா திருப்பிக் கொடுத்தார்.
'ஓட்டுகளை விலைக்கு வாங்கினோம்' என, பகிரங்கமாக கூறுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. வரும் நாட்களில், நாட்டில் இதை விட மோசமான நிலை ஏற்படலாம். சித்தராமையா இரண்டு முறை, முதல்வராக இருந்தது போதும், தலித் சமுதாயத்தினரை முதல்வராக்குங்கள். தலித்துகளின் ஓட்டுகளால் சித்தராமையா முதல்வரானார். தலித்துகள் ஒற்றுமையாக இருங்கள்.
பாதாமி தொகுதியில் போட்டியிடும்படி, சித்தராமையாவுக்கு ஆலோசனை கூறியதே நான்தான். இதற்கு சிம்மனகட்டி சம்மதிக்கவில்லை. அவரை, நான் சமாதானம் செய்து, சம்மதிக்க வைத்தேன். அப்போது சித்தராமையா, 'சாமுண்டீஸ்வரி தொகுதியில், 30,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' என நம்பிக்கை தெரிவித்தார்.
மஹாதேவப்பா, '40,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் சித்தராமையா வெற்றி பெறுவார்' என்றார். அப்போது நான் 'நீ தான் தோற்கப்போகிறாய்' என்றேன். தேர்தல் முடிவு நான் கூறியபடிதான் இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
எனக்கு தெரியாது! பாதாமி தொகுதியில், ஓட்டுகளை விலைக்கு வாங்கியது எனக்கு தெரியாது. அந்த நேரத்தில் இப்ராகிம், எனக்கு ஆதரவாக பணியாற்றினார். ஓட்டுகள் வாங்கப்பட்டதாக அவர் கூறும் விஷயம், எனக்கு புதிதாக இருக்கிறது. பாதாமியில் நான் வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே, பிரசாரத்துக்கு சென்றேன். - சித்தராமையா, முதல்வர்