கன்னட மொழி தேர்ச்சி விகிதம் சரிவுக்கு காரணம் என்ன?
கன்னட மொழி தேர்ச்சி விகிதம் சரிவுக்கு காரணம் என்ன?
ADDED : ஏப் 26, 2026 11:53 PM
பெங்களூரு: 'கற்பித்தல் முறைகளும், சிக்கலான பாடத்திட்டமுமே, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கன்னடத்தில் தோல்வியடைவதற்குக் காரணம்' என கூறியுள்ள வல்லுநர்கள், 'மொழி கற்பித்தலை எளிமையாக்கி, இலக்கணம் மற்றும் வாக்கிய அமைப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்' என்று பரிந்துரைத்துள்ளனர்.
50 ஆண்டு பழமை கர்நாடகாவில் கடந்த 23ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கன்னட மொழியில் மட்டும், 19,000 மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். இது கன்னட ஆர்வலர்கள், ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது.
கன்னட பேராசிரியர் புருஷோத்தம் பிலிமாலே கூறியதாவது:
கர்நாடகாவில் பெரும்பாலான குழந்தைகள் கன்னட மொழி தேர்வில் தோல்வி அடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, தற்போது மொழியை கற்பிக்க பின்பற்றப்படும் முறை 50 ஆண்டுகள் பழமையானது. இது மாற வேண்டும். தற்போதைய காலத்துக்கு ஏற்ப, மொழியை கற்க எளிய மற்றும் சுலபமான வழிமுறையை கொண்டுவர வேண்டும்.
இரண்டாவதாக, கன்னட மொழி பாடத்திட்டத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில், எளிமையாக்க வேண்டும். பள்ளியில் கன்னட மொழிக்கும், இலக்கியத்துக்கும் இடையே வேறுபாடு காட்டுவதற்கு பதிலாக, பள்ளியில் மொழியையும், உயர் கல்வியில் இலக்கிய மட்டத்திலும் பயிற்சி அளிக்க வேண்டும்.
குறைந்த பக்கங்கள் சமஸ்கிருதம் 20 பக்கங்கள், ஹிந்தி 25 பக்கங்கள் மட்டுமே உள்ளது. கன்னட மொழி பாடநுாலுக்கு மட்டும் ஏன் 100 பக்கங்கள் உள்ளன. இதனால் குறைந்த பக்கங்கள் கொண்ட மொழியை கற்க முனைகின்றனர்.
எனவே, கன்னட மொழி கற்பித்தலில் மாற்றமும், பாடநுாலை எளிமையாக்க வேண்டும். இல்லையெனில், கன்னடம் மேலும் பின்தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக, கன்னட மேம்பாட்டு ஆணை யம், உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து அறிக்கை தயாரித்து, விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வி நிபுணர் நிரஞ்சனராத்யா கூறியதாவது:
ஆசிரியர் பற்றாக்குறையால், ஒரே ஆசிரியர் அனைத்து பாடங்களையும் கற்பிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, அரசு அல்லது கன்னட பள்ளிகளில் கன்னட மொழி கற்பித்தலுக்கு உரிய முன்னுரிமை கிடைப்பதில்லை. மறுபுறம், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட பின், முறையான பயிற்சி பெறுவதில்லை.
ஒன்று முதல் 7 ம் வகுப்பு வரை கன்னட மொழி பாடத்திட்டத்தை உருவாக்க ஒரு குழுவும், 8 முதல் 10ம் வகுப்புக்கு மற்றொரு குழுவும் பி.யு.சி.,க்கு வேறு ஒரு குழுவும் உள்ளன. இதனால் மொழி கற்றல் பாடத்திட்டங்களுக்கு இடையேயான தொடர்பு இழக்கப்படும்.
உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்டங்களில், 90 சதவீத குழந்தைகளின் தாய் மொழி கன்னடம் அல்ல. ஆனால், அம்மாணவர்களில் 93 சதவீதம் பேர் கன்னடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதுபோன்று மாண்டியா, மைசூரு குழந்தைகளின் தாய்மொழி கன்னடமாக இருந்தாலும், தேர்ச்சி விகதம் 68 சதவீதம் மட்டுமே. கற்பித்தல் முறையிலும், பாடப்புத்தகங்களிலும் மாற்றம் தேவை என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
