ADDED : ஜூலை 11, 2026 11:27 PM

பெங்களூரு: ''மாநிலத்தின் பெரும்பாலான பஞ்சாயத்துகளின் பதவி காலம் முடிவடைந்துள்ளதால், அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படும்,'' என, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில், நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தின் பெரும்பாலான பஞ்சாயத்துகளின் பதவி காலம் முடிவடைந்துள்ளன. சில பஞ்சாயத்துகளின் தரம் உயர்வு காரணமாக, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்வது அவசியமாகி உள்ளது.
இந்த செயல் முறை இந்த மாதம் இறுதி அல்லது அடுத்த மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு முடிவு செய்து, மாநில தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும்.
ஆணையம், 45 நாட்களுக்குள் தேர்தலை நடத்தும். எனவே, அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் எஸ்.ஐ.ஆர்., செயல்முறையில் ஈடுபட்டு உள்ளனர். எனவே, தேர்தல் நடத்த அவகாசம் கோரப்பட்டு உள்ளது.
கிராமப்புறங்களில் மின் - சொத்துரிமை தொடர்பாக சிக்கல் உள்ளது. இது தொடர்பாக பல புகார்கள் வந்து உள்ளன. எஸ்.ஐ.ஆர்., செயல்முறை முடிந்த பின், மின் சொத்துரிமை தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும்.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களின் வீட்டு வாசலுக்கே வந்து, மின் சொத்துரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
