/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் எப்போது? மீண்டும் அமைதி கூட்டம் நடத்த உத்தரவு
/
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் எப்போது? மீண்டும் அமைதி கூட்டம் நடத்த உத்தரவு
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் எப்போது? மீண்டும் அமைதி கூட்டம் நடத்த உத்தரவு
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் எப்போது? மீண்டும் அமைதி கூட்டம் நடத்த உத்தரவு
ADDED : அக் 31, 2025 04:27 AM
கலபுரகி:  சித்தாபூரில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்துவது தொடர்பாக, நவ., 5ல் பெங்களூரில் அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் மீண்டும் அமைதி கூட்டம் நடத்தும்படி, கர்நாடக உயர் நீதிமன்ற கலபுரகி கிளை உத்தரவிட்டுள்ளது.
கலபுரகி மாவட்டம், சித்தாபூரில் அக்., 19ல் ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், பீம் ஆர்மியும் அனுமதி கோரியிருந்தன.
இதற்கு தாசில்தார் அனுமதி மறுத்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ்., முறையிட்டது. நீதிமன்றமும், தாசில்தார் உத்தரவை உறுதி செய்தது.
இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற கலபுரகி கிளையில், ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் அசோக் பாட்டீல் மேல்முறையீடு செய்து, நவ., 2ல் ஊர்வலம் நடத்த அனுமதி கோரினார்.
இதை விசாரித்த நீதிமன்றம், நவ., 2ல் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்ட அமைப்புகளுடன், அக்., 28ல் அமைதி கூட்டம் நடத்தி, அக்., 30ல் அறிக்கை சமர்ப்பிக்கும்படி அரசுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, மாவட்ட கலெக்டர் பவுசியா தரனும் தலைமையில் அக்., 28ல் அமைதி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அன்றைய தினம் நடந்த கூட்டத்தில், பாரதிய தலித் பேந்தர்ஸ் அமைப்பினரின் கோரிக்கையை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் ஏற்கவில்லை. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று நீதிபதி கமல் முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாக்குவாதம் விபரம்:
அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அன்றைய தினம், மனுதாரர் பங்கேற்கவில்லை.
மனுதாரர் தரப்பு வக்கீல் அருண் ஷியாம்: மனுதாரர் வீட்டில் இறப்பு சம்பவம் நடந்ததால், அமைதி கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அமைப்பின் மற்ற பிரதிநிதிகள் பங்கேற்றனர். குறிப்பிட்ட காலத்துக்குள் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மற்ற அமைப்பினர் நடத்தும்  ஊர்வலங்களுக்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
நீதிபதி: அமைதி கூட்டத்தில் மனுத் தாக்கல் செய்தவர் கலந்து கொண்டிருக்க வேண்டும்.
அட்வகேட் ஜெனரல்: மனுதாரர் வேறு நாளில் கேட்டிருந்தால், நாங்கள் அனுமதித்திருப்போம். மனுதாரர் தனிப்பட்ட நபரே தவிர, அமைப்பை சேர்ந்தவர் அல்ல. மனுதாரரை தொடர்பு கொண்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அவர் ஒத்துழைக்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், இந்த விசாரணையில், மத்திய அரசையும் சேர்க்க வேண்டும் என்று மனுதாரர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. இவ்விஷயத்தில் மனுதாரர் அரசியல் செய்கிறார்.
நீதிபதி: அமைதி கூட்டம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. மனுதாரருக்கு பதிலாக, மற்றவர்கள் ஆஜராகி அறிக்கை வழங்குவது சரியாக இருக்காது. குழப்பதை தீர்ப்பதே நீதிமன்றத்தின் நோக்கம்.
வக்கீல் அருண் ஷியாம்: மீண்டும் அமைதி கூட்டம் நடத்தினால், அவர் பங்கேற்க தயாராக இருக்கிறார்.
நீதிபதி: இது தொடர்பாக, பெங்களூரில் அட்வகேட் ஜெனரல் அலுவலகத்தில் நவ., 5ம் தேதி மீண்டும் அமைதி கூட்டம் நடத்தி, தீர்வு காணுங்கள். இம்மனு, நவ., 7க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

