/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.40 கோடி சீட்டு பணத்துடன் தலைமறைவான தம்பதி எங்கே?
/
ரூ.40 கோடி சீட்டு பணத்துடன் தலைமறைவான தம்பதி எங்கே?
ரூ.40 கோடி சீட்டு பணத்துடன் தலைமறைவான தம்பதி எங்கே?
ரூ.40 கோடி சீட்டு பணத்துடன் தலைமறைவான தம்பதி எங்கே?
ADDED : ஜூலை 07, 2025 04:02 AM
புட்டேனஹள்ளி, : பொதுமக்களிடம் வசூலித்த 40 கோடி ரூபாய் ஏலச்சீட்டு பணத்துடன், தம்பதி தலைமறைவாகி ஒரு மாதம் ஆகியும், அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை சந்தித்து முறையிட்டனர்.
பெங்களூரு ஜரகனஹள்ளியை சேர்ந்தவர் சித்தாச்சாரி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் சேர்ந்து, கடந்த 20 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஐந்து லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரை, மாத தவணையாக பணம் செலுத்தினர். இதன்மூலம் தம்பதி 40 கோடி ரூபாய் வரை வசூலித்து உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 3ம் தேதியில் இருந்து, மகன், மகளுடன் தம்பதி திடீரென மாயமாகினர். இதனால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மொபைல் போனில் அழைத்தாலும் எடுத்து பேசவில்லை.
இதுபற்றி புட்டேனஹள்ளி போலீசுக்கு கடந்த மாதம் 5ம் தேதி தகவல் கொடுத்தனர். சித்தாச்சாரி வீட்டில் சென்று பார்த்த போது, மொபைல் போன்கள் வீட்டில் இருந்தன.
ஆனால் வீட்டிற்குள் வேறு எந்த பொருட்களும் இல்லை. வங்கிக்கணக்கில் இருந்த பணம், ஏலச்சீட்டு பணம் 40 கோடி ரூபாயுடன், தம்பதியும், அவர்களின் பிள்ளைகளும் தலைமறைவானது தெரிந்தது. பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரில், புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தம்பதியை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர்.
நேற்று காலை சதாசிவநகரில் உள்ள, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டிற்கு, பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள் சென்றனர். பரமேஸ்வரை சந்தித்து, தங்களிடம் பண மோசடி செய்த தம்பதியை கைது செய்து, நாங்கள் கட்டிய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவரும் உறுதி அளித்து உள்ளார்.