/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருக்கே'
/
'கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருக்கே'
ADDED : ஆக 19, 2025 02:39 AM

'கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியா இருக்கே' என்று புலம்பும் அளவுக்கு, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு, எதைத் தொட்டாலும் நெருக்கடியாக மாறி, தலைவலியைக் கொடுக்கிறது.
ஹெப்பால் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி, அதன் வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் பிரச்னையாக உருவெடுத்து வந்தது. அதிலும் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உருவான பின், இந்த சாலை முக்கிய சந்திப்பாக உருவெடுத்தது.
எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறையை தன் வசம் வைத்திருக்கும் துணை முதல்வர் சிவகுமார் கவனம் செலுத்தினார். இதற்காக 80 கோடி ரூபாயில் பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் திட்டம் வகுத்தது.
இந்த மேம்பாலம், மேக்ரி சந்திப்பு, கே.ஆர்.புரம், கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம், நாகவாரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இந்த மேம்பாலத்தை திறந்து வைக்க மாநில அரசு தேர்ந்தெடுத்த, 'பீக் ஹவர்' என்ற பரபரப்பான அலுவலக வேளை நேரம், கடும் விமர்சனங்களை அரசுக்கு எதிரான கண்டனங்கள் உருவாக காரணமாக அமைந்துவிட்டது.
முதல்வரும், துணை முதல்வரும் தவிர அக்கட்சியின் பிரமுகர்கள், அதிகாரிகளால் ஹெப்பால் மேம்பால பகுதி முழுதும் நேற்று பரபரப்பான காலை வேளையில் கடும் போக்குவரத்து நெரிசலை உருவாக்கியது.
இந்த நெரிசல், சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் உருவாக வழி வகுத்தது. தொடர் விடுமுறைக்குப் பின், அலுவலக நேரத்தில் பாலத்தை திறக்க திட்டமிட்டது, தவறான செயல் என, பெரும்பாலானோர் கருத்துகளை பதிவிட்டிருந்தனர். மூன்று நாட்கள் விடுமுறை இருந்த காலத்தில் பாலத்தை திறந்து வைத்திருக்கலாமே என்றே பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்ற பின், நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள முக்கியமான திட்டமாக ஹெப்பால் மேம்பாலம் கருதப்படுகிறது. அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் என்று காங்கிரஸ் கட்சியினர் கருதிய வேளையில், பாராட்டுக்கு பதிலாக, மேம்பாலம் திறந்த முதல் நாளே கடும் விமர்சனங்களை அரசு எதிர்கொள்ள வேண்டி வந்தது.
கெம்பே கவுடா விமான நிலையத்துக்கு செல்ல விரைந்து கொண்டிருந்த பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தன் 'எக்ஸ்' பக்கத்தில், 'திங்கட்கிழமை பரபரப்பான காலை வேளையில் மேம்பாலத்தைத் திறக்க மாநில அரசு முடிவு செய்ததால் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் ஏறக்குறைய 50 நிமிடங்கள் ஹெப்பால் சந்திப்பு அருகே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
'கிட்டத்தட்ட டில்லி செல்லும் விமானத்தை தவறவிடும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் திட்டத்தை அமல்படுத்துவதிலோ, திறந்து வைப்பதிலோ கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அதில் எல்லாம் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை' என பதிவிட்டிருந்தார்.
மற்றொரு சமூகவலைதள பதிவில் ஒருவர், 'கடந்த வாரமே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தை மீண்டும் திறந்துவைக்க திங்கட்கிழமையை தேர்ந்தெடுத்துள்ளீர்களே, முதல்வர் அலுவலகம் உங்களுக்கு கருணையே இல்லையா?' என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில், சித்தராமையா அரசுக்கு பாராட்டுகளுக்கு பதிலாக எதிரான பதிவுகளே நிரம்பி வழிந்தன.
- நமது நிருபர் -