விவசாயி தற்கொலைக்கு யார் பொறுப்பு? எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி
விவசாயி தற்கொலைக்கு யார் பொறுப்பு? எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி
ADDED : ஜூலை 26, 2026 11:53 PM

பெங்களூரு: விவசாயிகள் தற்கொலைக்கு பொறுப்பேற்பது யார் என்று, அரசுக்கு, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசோக்கின் பதிவு:
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட நிகழ்வுகளை தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். இதனால் எனது கேள்விகளுக்கு, கர்நாடக அரசு பதில் அளிக்க வேண்டும்.
கே.பி.எஸ்.சி., நடத்திய கால்நடை மருத்துவ அதிகாரி பதவிக்கு, 80 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாக கூறப்படும் ஆடியோ வெளியானது பற்றி, விரிவான, சுதந்திரமான, வெளிப்படையான விசாரணை எப்போது நடக்கும்; இதற்கு யார் பொறுப்பு ஏற்பர்; யார் ராஜினாமா செய்வார்.
சின்னசாமி மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 அப்பாவி உயிர்கள் பலியாகின. அந்த துயரத்திற்கு தார்மிக, நிர்வாகரீதியில் பொறுப்பு ஏற்பது யார்; யார் ராஜினாமா செய்வர்.
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில், மாநிலம் முழுதும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பு; யார் பதவியில் இருந்து விலகுவர். ஜனநாயகத்தில் அதிகாரம் என்பது வெறும் பதவி மட்டுமல்ல பொறுப்பும் கூட.
தவறுகள் நடக்கும்போது அதிகாரிகளை குறை சொல்லாமல், யார் தவறு செய்தார்களோ அவர்கள் உண்மையை ஏற்க வேண்டும். மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பணியை அரசு செய்ய வேண்டும்.
'ஜென் சி' தலைமுறை பெயரில் அரசியல் செய்யும் முதல்வர் சிவகுமார், மற்ற தலைமுறையினருக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறார்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
