தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சீரழிந்து கிடக்கும் தங்கவயல் ஆலமரம் பகுதி குளத்தை புதுப்பிக்கும் பொறுப்பு யாருக்கு?

 சீரழிந்து கிடக்கும் தங்கவயல் ஆலமரம் பகுதி குளத்தை புதுப்பிக்கும் பொறுப்பு யாருக்கு?

 சீரழிந்து கிடக்கும் தங்கவயல் ஆலமரம் பகுதி குளத்தை புதுப்பிக்கும் பொறுப்பு யாருக்கு?


ADDED : மார் 24, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: மாநில நெடுஞ்சாலையில், பேத்தமங்களா- - தங்கவயல்- - பங்காருபேட்டை ஆகியவை கூடி பிரியும் ஒரு இடமாக விளங்குவது பெமல் ஆலமர சதுக்கம். இதனையொட்டி உள்ள குளம் பராமரிப்பு இல்லாமல் வறண்டு, குப்பைத்தொட்டி போல காட்சி அளிக்கிறது. ஆலமர சதுக்கத்தில் வாகனங்கள், மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளத்தின் இருபுறமும் ஆட்டோ நிறுத்துமிடங்களும், மறுபுறம் கோவிலும் உள்ளன.

குளத்துடன் நுாற்றாண்டுகளை கடந்த ஒரு பெரிய ஆலமரம் உள்ளது. இந்த மரம் நிழல் தருகிறது. தெருவோர வியாபாரிகள் மரத்தின் நிழலில் தான் வியாபாரம் செய்கின்றனர். குளத்தை சுற்றியுள்ள கல் இருக்கைகள், முதியவர்கள் ஓய்வெடுக்கவும், அவர்கள் கலந்துரையாடும் இடமாகவும் விளங்குகிறது. சமீபகாலமாக இந்த குளம் பராமரிக்கப் படவில்லை.

யாருக்கு சொந்தம் குளத்தின் வடக்கு பகுதி தொட்டூர் கரப்பனஹள்ளி கிராம பஞ்சாயத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. தெற்கு பகுதி தங்கவயல் நகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. சுற்றியுள்ள பகுதி மத்திய அரசின் பெமல் நிறுவனத்திற்கு சொந்தமானது.

இப்போது, கர்நாடக தொழில் வளர்ச்சி துறையின் வரம்புக்குள் உள்ளன. அப்படி இருந்தும், பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பெமல் நிறுவனமே அந்த குளத்தை பலமுறை சீரமைத்தது.

விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு இந்த குளம் தான் வசதியாக இருந்தது. இந்தக் குளத்தில் படிக்கட்டுகளும் கட்டப்பட்டன. இருப்பினும் சமீப காலமாக நிதி நெருக்கடியால் பெமலின் பாதுகாப்பு பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பெமல் நிறுவனம் சுகாதாரத்தை பற்றி கவலைப்படவில்லை. குளத்தைச் சுற்றி முட்கள் வளர்ந்துள்ளன.

விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் கரைப்பு மையம் மாசுபடுகிறது. அருகில் உள்ளவர்கள் கழிவுகளையும், குப்பைகளையும் கொண்டு வந்து கொட்டுகின்றனர். குளத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள வணிக பெயர் பலகைகள் குளத்தின் அழகையும் மறைத்துள்ளன.

குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர ஒரு பெரிய மழைநீர் கால்வாய் இருந்தது. லேசான மழை பெய்தாலே குளம் நிரம்பிவிடும். அந்த மழைநீர் கால்வாய் இருக்கும் இடமே தெரியாமல் மறைந்து போயுள்ளது. இங்கு வைத்திருந்த, 'பாலாறு பேசின்' பெயர் பலகையுடன் இருந்த கல்வெட்டையும் காணவில்லை. இப்போது கனமழை பெய்தாலும் குளம் நிரம்புவதில்லை.

வருமான வரி தங்கவயல் நகரத்திற்கு செல்லும், இந்த ஆலமர சதுக்கத்தின் அழகை பற்றி தங்கவயல் நகராட்சி கவலைப்பட்டதே இல்லை. அது யாருடைய நிலம் என்று தங்கவயல் நகராட்சி ஊழியர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை. பெயரளவுக்கு மட்டுமே, பெமல் 1வது வார்டுக்கு உட்பட்டது. ஆனால், ஒருமுறை கூட நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணிகளை மேற்கொண்டதாக தெரியவில்லை. ஆனாலும், பெமல் நிறுவனத்திடம் நகராட்சி வரியாக பல கோடி ரூபாயை பெற்று வருகிறது.

தங்கவயல் நகராட்சியாவது, இந்த குளத்தின் மீது கவனம் செலுத்தி சீரழிந்துள்ள குளத்தை புதுப்பிக்கலாம். இந்த ஆலமரம் தங்கவயல், பங்கார்பேட்டை என இரு சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்டது. இரு தொகுதி எம்.எல்.ஏ.,க்களும், ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே.

ஆயினும் சுற்றுச்சூழலையும், பழமையான குளத்தையும் பாதுகாக்க கவனம் செலுத்தவில்லையே என்ற ஆதங்கம் இப்பகுதி மக்களிடையே உள்ளது.

..புல் அவுட்-...

வரலாறு அழியக்கூடாது

தங்கவயலின் நுழைவு வாயில் தான் ஆலமரம் சதுக்கம். இங்குள்ள குளம், சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஆனால், அதற்கான கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை. இக்குளம் இன்றைக்கு சீரழிந்துள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பி பல ஆண்டுகளாகிறது. முன்னர் கால்நடைகள் குடிப்பதற்கு பயன் உள்ளதாக இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும்.

கே. கருணாமூர்த்தி, பாரத் நகர், பெமல் நகர்

****

ஓய்வெடுக்க ஏற்ற இடம்!

தங்கவயலுக்கும், பங்காருபேட்டைக்கும் மத்தியில் இருப்பது தான் பெமல் ஆலமர பகுதி. இங்குள்ள குளத்தின் அருகே பரந்து விரிந்த ஆலமரத்தின் நிழலில் ஓய்வெடுத்து, அந்த குளத்தின் நீரில் சிறிது நேரம் விளையாடி விட்டு செல்வோம். அந்த குளத்தில் தற்போது ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. முதியோர் ஓய்வெடுக்க, உரையாட ஏற்ற இடமாக இருந்தது.

- கிருஷ்ணமூர்த்தி

சொர்ணா நகர், தங்கவயல்.

****

குப்பை கிடங்கு?

அண்மை காலமாக ஆலமரம் பகுதியில் ஆள்நடமாட்டம், வாகன பெருக்கம் அதிகரித்துள்ளது. இங்கிருந்து தங்கவயல், பங்காருபேட்டை, கோடி லிங்கேஸ்வரர் கோவில் உள்ள கம்மசந்திரா, பேத்தமங்களா, தொட்டூர் கர்ப்பனபள்ளி கிராம பஞ்சாயத்து அலுவலகம் செல்ல சந்திப்பு பகுதியாக உள்ளது. வளர்ந்து வரும் வர்த்தக பகுதியாகவும் காணப் படுகிறது. ஆலமரத்தின் குளம் குப்பைகளின் கிடங்கு போல மாறலாமா.

சர்மிளா,

சின்கோட்டே, பெமல் நகர்.

***

சுற்றுப்புற சுகாதாரம்

ஆலமர சதுக்கம் பெமல் தொழிற்சாலைக்கு உட்பட்ட இடத்தில் இருப்பதால் துப்புரவு பணிகளை 1964 முதல், அந்த நிறுவனமே செய்து வந்தது. அண்மையில் பெமல் நிறுவனம் தொழில் உற்பத்தியில் தான் முழு கவனம் செலுத்துகிறது. தங்கவயல் நகராட்சிக்கு உட்பட்ட இடமாக இருந்தும், அதன் நிர்வாகமோ, கிராம பஞ்சாயத்து நிர்வாகமோ அக்கறை செலுத்தவில்லை. குளத்தை சீரமைக்க வேண்டும்.

- அனிதா, வசந்த நகர், பெமல்நகர்

***

தண்ணீர்... தண்ணீர்...

பெமல் ஆலமரம் பகுதியில் மாதத்தின் கடைசி நாள் 'பே மென்ட்' மார்க்கெட் சந்தை கூடுகிறது. தங்கவயல் மட்டுமின்றி மாலுார், கோலார், பெங்களூரு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, பர்கூர், குப்பம் பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் தங்களின் விற்பனை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த வியாபாரிகள், நுகர்வோர் பயன் பெறுவதற்கு தண்ணீர் வசதி இல்லை. ஆலமரம் குளத்தில் நீர் இருந்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே, குளத்தை சீர்படுத்த வேண்டும்.

-முஹம்மத், உரிகம்பேட்டை, தங்கவயல்

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us