பா.ஜ.,வை இயக்குவது யார்? எடியூரப்பாவுக்கு சோமசேகர் கேள்வி
பா.ஜ.,வை இயக்குவது யார்? எடியூரப்பாவுக்கு சோமசேகர் கேள்வி
ADDED : ஏப் 01, 2026 03:40 AM

பெங்களூரு: மாற்று கட்சியில் இருந்து பா.ஜ.,வுக்கு வருவோர், உங்கள் ஷு வை நக்க வேண்டுமா என, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு, யஷ்வந்த்பூர் எம்.எல்.ஏ., சோமசேகர் காட்டமாக கடிதம் எழுதி உள்ளார்.
நீக்கப்பட்டனர் பெங்களூரு யஷ்வந்த்பூர் பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சோமசேகர். கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், விதான் சவுதாவில் நடந்து முடிந்த கூட்டத்தொடரில், தன் தொகுதி பிரச்னை குறித்து சோமசேகர் பேசுகையில், 'நைஸ் ரோடு அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் அரசுகள் இழப்பீடு வழங்கவில்லை என்று கூறியதுடன், என்னை கட்சியில் இருந்து நீக்கிய போது நான் நினைத்திருந்தால் மறுபடியும் கட்சியில் இணைந்திருப்பேன்' என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், யஷ்வந்த்பூர் பா.ஜ., பிரமுகர் ருத்ரேஷ் கூறுகையில், 'சோமசேகர் மீண்டும் பா.ஜ.,க்கு ஏன் வர வேண்டும். இங்கு வந்து எடியூரப்பாவின் ஷு வை நக்க உள்ளாரா' என்று கிண்டல் அடித்தார்.
இதுகுறித்து எடியூரப்பாவுக்கு சோமசேகர் எழுதியுள்ள கடிதம்:
யஷ்வந்த்பூர் தொகுதியில் ஆறு முறை போட்டியிட்டு, நான்கு முறை வெற்றி பெற்று உள்ளேன். எம்.எல்.ஏ.,வாக இருக்கும் என்னை, பா.ஜ., பிரமுகர் ருத்ரேஷ் இவ்வளவு கீழ்தரமாக பேசுவது சரியல்ல. என் கேள்விக்கு நீங்கள் (எடியூரப்பா) பதில் அளிக்க வேண்டும்.
கடிதம் மாற்று கட்சியில் இருந்து பா.ஜ.,வில் சேருவோர் உங்கள் ஷு வை நக்க வேண்டுமா?
பா.ஜ.,வில் இந்த கலாசாரம் உள்ளதா?
ஷு வை நக்கினால் மட்டும் தான் கட்சியில் பதவியா?
நான் கட்சியில் இருந்து ஏன் வெளியேற்றப்பட்டேன்?
ஒருவேளை நான் பா.ஜ.,வுக்கு திரும்புவதாக இருந்தால், உங்கள், உங்கள் மகன் விஜயேந்திரா ஷு வை நக்க வேண்டுமா?
விஜயேந்திரா, ருத்ரேஷ் ஆகியோரில் யார் கட்சியை இயக்குகின்றனர்?
நைஸ் நிறுவனத்தால் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை பற்றி கேள்வி எழுப்பக்கூடாதா?
என்னை பற்றி ருத்ரேஷ் கூறியதை நீங்கள் ஏற்று கொள்வீர்களா?
இவ்வாறு கடிதத்தில் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
கடிதம் எழுதியது குறித்து சோமசேகர் கூறுகையில், ''எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தேன். நான் உட்பட 17 பேரின் தியாகத்தால் எடியூரப்பா முதல்வரானார். என்னை அவர் அமைச்சராக்கினார். 2023 தேர்தலிலும் சீட் வாங்கி கொடுத்தார். அவரை பற்றி நான் எதுவும் பேச மாட்டேன்.
என் தொகுதியில், பா.ஜ., தலைவர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்னை பற்றி அவரிடம் கூறிய போது, என் மகன் விஜயேந்திரா கட்சி தலைவரானதும் அனைத்தையும் சரி செய்வார் என்று கூறினார்.
ஆனால், எதுவும் சரியாகவில்லை. கட்சியில் இருந்து என்னை நீக்கிய பின், எடியூரப்பா என்னிடம் பேசாதது வேதனை அளித்தது,'' என்றார்.
சோமசேகர் எழுதிய கடிதம் தன்னிடம் வரவே இல்லை என்று, எடியூரப்பா கூறி உள்ளார்.
