ADDED : ஏப் 23, 2026 04:19 AM

ஹாசன்: அடுத்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், ம.ஜ.த., - பா.ஜ., இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது.
க ர்நாடகாவில் தேசிய கட்சியான பா.ஜ.,வும், மாநில கட்சியான ம.ஜ.த.,வும் கூட்டணியில் உள்ளனர். ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி, மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக உள்ளார். ஏற்கனவே 2 முறை முதல்வராக இருந்த அவருக்கு, வரும் 2028 சட்டசபை தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வராக வேண்டும் என்று ஆசை உள்ளது.
ம.ஜ.த., தலைவர்களும் குமாரசாமி முதல்வர் ஆக வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றனர். இது பா.ஜ., தலைவர்களுக்கு எரிச்சலை கிளப்பி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பின், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பார்த்து கொள்ளலாம் என்று பதிலடி கொடுத்தனர். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், தேர்தல் முடிந்ததும் யார் முதல்வர் என்பதை பா.ஜ., தலைவர்கள் தீர்மானிப்பர் என்று கூறி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குமாரசாமி.
இந்நிலையில் நேற்று ஹாசனுக்கு சென்ற, குமாரசாமியின் மகன் நிகில் கூறுகையில், ''பா.ஜ.,வுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தாலும், எங்கள் கட்சியின் சித்தாந்தபடி செயல்பட்டு வருகிறோம். சட்டசபை தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் குமாரசாமி முதல்வராக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்,'' என்றார்.
இதற்கு ஹாசன் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், கட்சியின் மாநில பொது செயலருமான பிரீத்தம் கவுடா பதிலடி கொடுத்து உள்ளார்.
அவர் கூறுகையில், ''சித்தாந்தபடி ம.ஜ.த., செயல்படுவதாக நிகில் கூறியதை வரவேற்கிறேன். நாங்கள் எங்கள் சித்தாந்தபடி செயல்படுவோம். அது அவர்களுக்கும் நல்லதாக அமையட்டும். குமாரசாமி தற்போது மத்திய அமைச்சராக உள்ளார். அவர் முதல்வர் ஆவதை எங்கள் கட்சி தலைவர்கள் ஏற்பரா, இல்லையா என எனக்கு தெரியாது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் பார்த்து கொள்ளலாம். பீஹாரில் சாம்ராட் சவுத்ரி முதல்வரானதை போல, எங்கள் கட்சியில் இருந்து யாராவது ஒருவர் முதல்வர் ஆகலாம். பொறுத்திருந்து பார்க்கலாம். தேர்தலில் ஹாசன் தொகுதியில் நான் தான் போட்டியிடுவேன்,'' என்றார்.
