தாவணகெரே 'சீட்' யாருக்கு? குழப்பத்தில் காங்கிரஸ் மேலிடம்
தாவணகெரே 'சீட்' யாருக்கு? குழப்பத்தில் காங்கிரஸ் மேலிடம்
ADDED : மார் 22, 2026 05:06 AM
பெங்களூரு: காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, பெங்களூருக்கு வந்து, தொடர்ச்சியாக கூட்டங்கள் நடத்தியும், தாவணகெரே தெற்கு சட்டசபை தொகுதிக்கான வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிக்கிறது.
கர்நாடக காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ.,க்களில் ஒருவராக இருந்தவர் சாமனுார் சிவசங்கரப்பா, 94. கடந்தாண்டு டிசம்பரில் மரணமடைந்தார். அவரின் மறைவாலும்; பாகல்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., மேட்டி மறைவாலும் இரு தொகுதிகளுக்கும் ஏப்ரல், 9ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
முஸ்லிம் தலைவர்கள் தாவணகெரே தெற்கு தொகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். சாமனுார் சிவசங்கரப்பா இருக்கும் வரை, காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் தலைவர்கள் இத்தொகுதி விஷயத்தில் தலையிடவில்லை. அவரின் மறைவை அடுத்து நடக்கும் இடைத்தேர்தலில், தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என, அக்கட்சியின் அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் குரல் எழுப்புகின்றனர்.
இந்த நெருக்கடியை போக்க, மாநில மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார்.
இக்கூட்டத்துக்கு பின், துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செயலர்கள் அபிஷேக் தத், கோபிநாத் பழனிசாமி , அமைச்சர்கள் ஈர்வர் கன்ட்ரே, ஜமீர் அகமது கான், கிருஷ்ணபைரே கவுடா, சரண் பிரகாஷ் பாட்டீல், ரஹீம் கான், மது பங்காரப்பா, திம்மாபுரா, மாநில செயலர் வினய்குமார் சொரகே, சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண் டனர்.
அப்போது அமைச்சர் ஜமீர் அகமது கான், 'சிறுபான்மையினருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். முதல்வரின் அரசியல் செயலர் ரஹீம் கான், நசீர் அகமது, சட்டசபை ஆளும் கட்சி தலைமை கொறடா சலீம் அகமது, எம்.எல்.ஏ.,க்கள் தன்வீர் செய்ட், ரிஸ்வான் அகமது, ஹாரிஸ் மற்றும் பிற சிறுபான்மை தலைவர்களும், ஜமீரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஈஸ்வர் கன்ட்ரே வீரசைவ மகாசபை தலைவரும், வனத்துறை அமைச்சருமான ஈஸ்வர் கன்ட்ரே, ''பாகல்கோட்டில் மேட்டியின் குடும்பத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அதே விதிமுறையை, தாவணகெரே தெற்கு தொகுதிக்கும் பயன்படுத்த வேண்டும். இதுவரை இத்தகைய சூழ்நிலைகளில், கருணையின் அடிப்படையில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதுபோன்றே இப்போதும் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
கூட்டத்துக்கு பின், சலீம் அகமது கூறுகையில், ''முஸ்லிம் சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்க நாங்கள் கோரிக்கை விடுத்து உள்ளோம். இது குறித்து தலைவர்களுடன் ஆலோசித்து, இறுதி முடிவை அறிவிப்பதாக கட்சி தலைமை தெரிவித்து உள்ளது,'' என்றார்.
பின் சுர்ஜேவாலாவுடன் நடந்த சந்திப்புக்கு பின், ஜமீர் அகமது கான் தலைமையில் முஸ்லிம் எம்.எல்.ஏ.,க்கள், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேட்டபோது, 'இன்று (நேற்று) ரம்ஜான் பண்டிகை. இன்றைய தினத்தில் தேர்தல் பற்றி பேச விரும்பவில்லை. நாளை (இன்று) இந்த கேள்விக்கு பதிலளிக்கிறேன்' என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
சிறுபான்மையின தலைவர்கள் அழுத்தத்துக்கு மத்தியில், அமைச்சர் மல்லிகார்ஜுன் மகன் சமர்த்திற்கு சீட் பெற்றுத்தர பலர் முயற்சித்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
