/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்புவது ஏன்? ரத்தம் கொதிப்பதாக பா.ஜ., சுனில்குமார் ஆவேசம்
/
தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்புவது ஏன்? ரத்தம் கொதிப்பதாக பா.ஜ., சுனில்குமார் ஆவேசம்
தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்புவது ஏன்? ரத்தம் கொதிப்பதாக பா.ஜ., சுனில்குமார் ஆவேசம்
தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்புவது ஏன்? ரத்தம் கொதிப்பதாக பா.ஜ., சுனில்குமார் ஆவேசம்
ADDED : ஆக 14, 2025 11:16 PM

பெங்களூரு: ''தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பும் போது, எங்கள் ரத்தம் கொதிக்கிறது,'' என்று, சட்டசபையில் பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார் கூறினார்.
கர்நாடக சட்டசபையில் பூஜ்ய நேரத்தில், கார்கலா பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார் பேசியதாவது:
தர்மஸ்தலா ஹிந்து மக்களின் புண்ணிய தலமாக உள்ளது. மாநிலத்தில் அனைத்து ஹிந்துக்களின் வீடுகளிலும், தர்மஸ்தலா மஞ்சுநாதா சுவாமி புகைப்படம் உள்ளது. தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்களை புதைத்தாக, நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்தவர், சில எலும்பு கூடுகளை எடுத்து வந்தார்.
அதை எங்கிருந்து தோண்டி கொண்டு வந்தார் என்று, முதலில் விசாரித்திருக்க வேண்டும். புகார் கொடுத்தவரையும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று, தட்சிண கன்னடா எஸ்.பி., கூறினார். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.
பாகுபலி சிலை தற்போது சமூக வலைதளங்களில், குறிப்பாக பேஸ்புக், யு - டியூப்பில் தர்மஸ்தலா பற்றி அவதுாறு கருத்து பரப்பப்படுகிறது. எங்கள் ஆட்சியில் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி கலவரம் நடந்த போது, சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்ட அவதுாறு கருத்தால், குறிப்பிட்ட சமூகத்தினர் கொதித்து எழுந்து கலவரம் செய்தனர் என்று, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா கூறினார்.
தர்மஸ்தலா பற்றி அவதுாறு பரப்பப்படும் போது, எங்கள் ரத்தம் கொதிக்கிறது. பள்ளம் தோண்டுகிறோம் என்ற பெயரில், பாகுபலி சிலை மீது கை வைத்து உள்ளனர். இது அரசுக்கு நல்ல அறிகுறி இல்லை.
சமூக வலைதளங்களில் தர்மஸ்தலா குறித்து, அவதுாறு பரப்புவது குறித்து, இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யாதது ஏன். எனது தொகுதியில் ஒருவர் முகநுாலில், ராமாயணம் படிப்பதன் நன்மை என்ன என்று பதிவிட்டதற்காக வழக்கு பதிவாகி உள்ளது. சுள்ளியா முதல் பைந்துார் வரை, ஹிந்து அமைப்பினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
துபாய் சேனல் தர்மஸ்தலா வழக்கில் எஸ்.டி.பி.ஐ., அமைப்பு போராட்டம் நடத்துகிறது. அவர்களுக்கும், தர்மஸ்தலாவுக்கும் என்ன தொடர்பு. மஞ்சுநாதா கோவிலை இடிக்க பொக்லைன் இயந்திரம் கொண்டு செல்வோம் என்கின்றனர். கேரள அரசு, தர்மஸ்தலா வழக்கு பற்றி பேசுகிறது. என்ன நடக்கிறது என தெரியவில்லை.
நாங்கள் எஸ்.ஐ.டி., விசாரணையில் தலையிடவில்லை. அவதுாறு பரப்புபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. தர்மஸ்தலா வழக்கை பற்றி, துபாயில் உள்ள டிவி சேனலில் செய்தி வெளியாகிறது.
புகார்தாரர் பின்னணி குறித்து, உள்துறை ஆராயவில்லை. கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தால், புகார்தாரரை, உள்துறையின் ஆலோசகராக நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டும் பணி இன்னும் எத்தனை நாட்கள் நடக்கும். இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து, அரசு இடைக்கால அறிக்கை தர வேண்டும். புகார்தாரருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இது பற்றி அரசு சொல்வது என்ன. புகார்தாரர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்த பின்னர், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்தார். அதன் பின் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டது. அப்படி என்றால் தர்மஸ்தலா புகழை கெடுக்க வேண்டும் என்பது தான், இண்டியா கூட்டணி தலைவர்கள் எண்ணமா.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் சிவகுமார்: தர்மஸ்தலா மீது பா.ஜ., தலைவர்களை விட, எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. தர்மஸ்தலா வழக்கை அரசியலுடன் இணைக்காதீர்கள். எங்கள் கட்சியின் சிவலிங்கேகவுடா, அசோக்குமார் ராய் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.,க்கள், தர்மஸ்தலா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்றனர்.
புகார்தாரர் நீதிமன்றத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்து உள்ளார். அதன் பின்னரும் நாங்களும் ஒன்றும் செய்யாமல் இருக்க வேண்டுமா. மஞ்சுநாதா கோவில், நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே பற்றி எனக்கு தெரியும். கோவில், நிர்வாக அதிகாரிக்கு நானும் ஆதரவாக உள்ளேன்.
சுனில்குமார்: திருப்பதி, சபரிமலை பெயர்களுக்கு களங்கம் விளைவிக்க நினைத்தது போல, தர்மஸ்தலா பெயருக்கும் களங்கம் விளைவிக்க முயற்சி நடக்கிறது. காட்டில் இருந்த நக்சல்களிடம் பேச்சு நடத்தி அழைத்து வந்து, இப்போது நகர்ப்புற நக்சல்களாக மாற்றி உள்ளனர்.
(இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)
அமைச்சர் பிரியங்க் கார்கே: சத்தீஸ்கர் மாநிலத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நக்சல்கள் சரண் அடைந்ததற்கு, நீங்கள் பாராட்டு தெரிவித்தீர்கள். எங்கள் முன்பு சரண் அடைந்த நக்சல்களை, நகர்ப்புற நக்சல் என்று விமர்சிக்கிறீர்கள்.
சுனில்குமார்: தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டி எதுவும் கிடைக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் புகார்தாரர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அரசு அறிவிக்க போகிறது. ஓட்டுமொத்த அமைச்சரவையும் தர்மஸ்தலாவுக்கு சென்று, மஞ்சுநாதா சுவாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.