/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓட்டு திருட்டு ஆயுதத்தை ராகுல் கையில் எடுத்தது ஏன்?
/
ஓட்டு திருட்டு ஆயுதத்தை ராகுல் கையில் எடுத்தது ஏன்?
ஓட்டு திருட்டு ஆயுதத்தை ராகுல் கையில் எடுத்தது ஏன்?
ஓட்டு திருட்டு ஆயுதத்தை ராகுல் கையில் எடுத்தது ஏன்?
ADDED : ஆக 12, 2025 11:25 PM

லோக்சபா தேர்தல் முடிந்து, ஓராண்டுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், 'பா.ஜ.,வுடன் தேர்தல் கமிஷன் கைகோர்த்து, தேர்தலில் முறைகேடு செய்தது; ஓட்டுத் திருட்டு நடந்துள்ளது' என, புதிய பிரச்னையை கிளப்பி உள்ளார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியின் ராகுல்.
ஆனால் தேர்தலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என, தேர்தல் கமிஷன் கூறினாலும், 'தான் சொல்வது தான் உண்மை' என்பது போல ராகுல் விடாப்பிடியாக உள்ளார்.
நாடு முழுதும் ஓட்டுத் திருட்டுக்கு எதிராக போராட்டம் நடத்த போகிறாராம். இந்த போராட்டத்தை காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்த ராகுல், கடந்த 8ம் தேதி பெங்களூரில் போராட்டம் நடத்தினார்.
'மஹாதேவபுரா சட்டசபை தொகுதியில் முறைகேடு நடந்தது. ஷகும் ராணி என்ற பெண் இரு முறை ஓட்டு போட்டார்' என்று ராகுல் கூறினார். ஆனால் ஷகும் ராணியோ, 'எனக்கே 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு இடத்திற்குச் சென்று ஓட்டு போடுவதே கஷ்டம்; இரண்டு இடத்தில் நான் எப்படி ஓட்டு போட முடியும்?' என்று கேள்வி எழுப்பினார். இது ஓட்டுத் திருட்டு குற்றச்சாட்டு கூறிய ராகுலுக்கு சம்மட்டி அடியாக விழுந்தது.
ஒரு வித உண்மை 'நாட்டில் என்ன நடக்கிறது என்பதே ராகுலுக்கு தெரியாது; தன்னுடன் இருப்பவர்கள் என்ன சொல்கின்றனரோ அதுவே வேத வாக்கு என்று பேசும் நபராகவே உள்ளார். அவர் இன்னும் அரசியலில் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்; லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி நிழல் பிரதமர் பதவிக்கு நிகரானது என்பதால், தன்னை பிரதமர் என்று நினைத்துக் கொண்டு ராகுல் பேசுகிறார்' என, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். ஒரு விதத்தில் இது உண்மை தான்.
ஏன் என்றால், 'ராகுலிடம் சென்று ஏதாவது விஷயம் பற்றி பேசினால், அதுபற்றி கூகுளில் தேடிய பிறகே அதுபற்றி பேசுவார்' என, காங்கிரஸ் வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுவதும் வழக்கம்.
இப்போது எதற்காக ஓட்டுத் திருட்டு பிரச்னையை கையில் எடுத்துள்ளார் என்று ஆழமாக தோண்டி பார்த்தபோது உண்மை தெரிய வந்துள்ளது.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023 சட்டசபை தேர்தலுக்கு முன்பு, 'பாரத் ஜோடோ' என்ற பெயரில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ராகுல் பாதயாத்திரை நடத்தினார். இந்த பாதயாத்திரை கர்நாடகாவிலும் நடந்தது.
ராகுல் பாதயாத்திரை சென்ற தொகுதிகளில் எல்லாம், காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்று, ஒரு மாயை உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால் ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்ததால் தான், கர்நாடகாவில் காங்கிரசை மக்கள் ஆதரித்தனர்.
வாக்குறுதி திட்டங்களை அமல்படுத்தினாலும், இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தவில்லை. வாக்குறுதி திட்டங்களால் பிற மேம்பாட்டுப் பணிகள் நடக்கவில்லை. மாநில தலைநகரான பெங்களூரில் சாலைகள் நிலை படுமோசமாக உள்ளன.
வடமாவட்டங்கள் ஏற்கனவே வளர்ச்சியில் பின்தங்கியவை. தற்போது அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டன. விலைவாசி உயர்வு உட்பட பல காரணங்களால், காங்கிரஸ் ஆட்சியா, அய்யோ போதும்டா சாமி.
அடுத்த தேர்தலில் இவர்களுக்கு ஓட்டு போடவே கூடாது என்ற மனநிலைக்கு, மாநில மக்கள் வந்துவிட்டனர்.
நாட்டில் விரல் விட்டு எண்ண கூடிய வகையில், ஒரு சில மாநிலங்களில் தான் காங்கிரஸ் ஆட்சி உள்ளது. தென் மாநிலங்களில் கர்நாடகாவை தங்கள் கோட்டையாக பா.ஜ., பார்க்கிறது. கர்நாடகாவை பா.ஜ.,விடம் தாரை வார்த்தால், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என, காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது.
நாடகங்கள் இதனால் மக்கள் மனநிலையை மாற்ற, இப்போது இருந்தே, 'ஓட்டு திருட்டு' என்ற நாடகத்தை, ராகுல் ஆரம்பித்துள்ளார்.
வரும் நாட்களில் இன்னும் நிறைய நாடகங்கள், கர்நாடகாவில் அரங்கேறும் வாய்ப்பு உள்ளது. நாடகங்களை அரங்கேற்றி சிறந்த நடிப்பின் மூலம், மக்களை நம்ப வைத்து விடலாம் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் கணக்கு போட்டு உள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் நடத்திய 'கமிஷன் - கரப்ஷன் - கலெக் ஷன்' நாடகத்தை நம்பி ஓட்டு போட்டதை மக்கள் இன்னும் மறக்காத நிலையில், இந்த புதிய நாடகம் வெற்றி அடையுமா, படுதோல்வியை சந்திக்குமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- நமது நிருபர் -