/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவி தற்கொலை ஏன்? கணவர் ஒப்புதல் வாக்குமூலம்
/
மனைவி தற்கொலை ஏன்? கணவர் ஒப்புதல் வாக்குமூலம்
ADDED : ஏப் 14, 2025 06:16 AM

ஹெப்பால், : பழைய காதலியுடனான கள்ளத்தொடர்பே, தன் மனைவியின் தற்கொலைக்கு காரணம் என, மென் பொறியாளர் பஷீர் உல்லா ஒப்பு கொண்டார்.
பெங்களூரு, ஹெப்பாலின், கனகநகரில் வசிப்பவர் பஷீர் உல்லா, 34. இவர் பெங்களூரின் தனியார் நிறுவனத்தில், மென் பொறியாளராக பணியாற்றுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், இவருக்கும், பஹர் ஆஸ்மா, 30, என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஆஸ்மா எம்.ஏ., பட்டதாரி.
பஷீர் உல்லா, திருமணத்துக்கு முன், வேறு ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். காதல் முறிந்ததால், பஹர் ஆஸ்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின், முன்னாள் காதலியுடன் மீண்டும் உறவை புதுப்பித்து கொண்டார். அவருடன் நெருக்கமாக இருந்தார். இதையறிந்த மனைவி கோபமடைந்து, கணவரை கண்டித்தார்; கள்ளத்தொடர்பை விட்டு விடும்படி மன்றாடினார்.
பஷீர் உல்லா மறுத்தார். இதே காரணத்தால் தம்பதிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. மனைவியை அடிக்கவும் செய்தார்.
கணவரின் செயலால் மனம் நொந்த பஹர் ஆஸ்மா, கடந்த 9ம் தேதி காலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தங்களின் மகளை பஷீர் உல்லாவும், அவரது குடும்பத்தினரும் அடித்து கொன்று துாக்கில் தொங்க விட்டதாக, ஆஸ்மாவின் பெற்றோர் ஹெப்பால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசாரும், பஷீர் உல்லாவை கைது செய்தனர். அவரது தாய் ஜபீர் தாஜ், அண்ணன் அர்ஷத் உட்பட குடும்பத்தினர் மீது வழக்கு பதிவானது.
பஷீர் உல்லாவிடம், போலீசார் விசாரணை நடத்திய போது, வாயை திறக்கவில்லை. இதற்கிடையே அவரது மொபைல் போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது, முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் இருப்பது தெரிந்தது. இதை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்ததால் தப்ப முடியாது என்பதை உணர்ந்த பஷீர் உல்லா, உண்மையை ஒப்பு கொண்டார்.
'முன்னாள் காதலியுடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதை என் மனைவியால் சகிக்க முடியவில்லை. தினமும் என்னோடு தகராறு செய்தார். அவரை நான் பொருட்படுத்தவில்லை. இதனால் மனம் நொந்து, தற்கொலை செய்து கொண்டார்' என கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

