தன்வீர் செய்ட் அமைச்சர் ஆகாதது ஏன்? விஸ்வநாத் புது தகவல்
தன்வீர் செய்ட் அமைச்சர் ஆகாதது ஏன்? விஸ்வநாத் புது தகவல்
ADDED : ஆக 05, 2026 11:07 PM

மைசூரு: ''அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, காங்கிரஸ் மேலிடம் சரியானபடி நடந்து கொண்டுள்ளது. ஆனால், தன்வீர் செய்ட் மற்றும் காயத்ரி சாந்தே கவுடாவுக்கு அமைச்சர் பதவி வழங்காதது சரியல்ல,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தன்வீர் செய்ட் அமைச்சரானால், தன் மகனுக்கு மைசூரு மாவட்ட பொறுப்பு கை நழுவும் என்ற காரணத்தால், தன்வீர் செய்ட்டுக்கு அமைச்சர் பதவி கிடைக்கவிடாமல், சித்தாரமையா தவிர்த்துள்ளார்.
குருபர் சமுதாயத்தை சேர்ந்த காயத்ரி சாந்தே கவுடாவுக்கு, கடைசி நேரத்தில் அமைச்சர் பதவி வழங்காமல் அவமதித்துள்ளனர். மகளிர் கோட்டாவில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும்.
மகளிர் கோட்டாவில், உமாஸ்ரீக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இவர், சித்தராமையா அமைச்சரவையில், அமைச்சராக இருந்தவர். இம்முறை காயத்ரி சாந்தே கவுடாவுக்கு, அமைச்சரவையில் வாய்ப்பளிக்க வேண்டும்.
மேல்சபை தலைவர் தலைவர் பதவியை, பசவராஜ் ஹொரட்டி தொடர்ந்து எட்டு முறை மேல்சபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். அவருக்கு அனுபவம் உள்ளது. தற்போது மேல்சபையில் பா.ஜ., பெரும்பான்மையை இழந்துள்ளது. காங்கிரசுக்கு பெரும்பான்மை உள்ளது. எனவே, அக்கட்சியினர் மேல்சபைக்கு தலைவரை தேர்வு செய்கின்றனர்; ஹொரட்டி உடனடியாக ராஜினாமா செய்வது நல்லது.
ஐந்து ஆண்டுகளுக்குள், வீடு கட்டாத காலி மனைகளை முடக்கும், முதல்வர் சிவகுமாரின் முடிவு வரவேற்கத்தக்கது. பதவிக்கு வந்த இரண்டு மாதங்களில், நற்பணிகளை செய்கிறார். எனவே, காவிரி விஷயத்தில் கன்னட போராட்டக்காரர்கள், அரசுக்கு ஆதரவளித்து, ஆலோசனை கூற வேண்டும்.
காவிரி விவாதத்தை தீர்த்து வைக்க, முதல்வர் சிவகுமார் முயற்சிப்பது நல்ல விஷயம். தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். அவரும் வர சம்மதித்திருந்தார்.
ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால், வர முடியவில்லை. வரும் நாட்களில் இரண்டு மாநிலங்களின் முதல்வர்கள், மீண்டும் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
