/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., அலுவலகத்துக்கு ஏன் வரவில்லை?
/
காங்., அலுவலகத்துக்கு ஏன் வரவில்லை?
ADDED : மே 04, 2025 12:15 AM

ராய்ச்சூர்: லிங்கசுகூர் வந்த அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீலுக்கும், காங்கிரஸ் பிரமுகருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
ராய்ச்சூர் மாவட்ட பொறுப்பு வகிக்கும் மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல், நேற்று லிங்கசுகூர் டவுனில் உள்ள சுற்றுலா லாட்ஜிற்கு வந்திருந்தார்.
சிறிது ஓய்வு எடுத்த பின், மான்வியின் உட்கனுார் கிராமத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டார். அப்போது, அவரை மறித்த ஒருவர், ''ராய்ச்சூர் பொறுப்பு அமைச்சரான நீங்கள், இங்கு வரவிருப்பதை ஏன், எங்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை? எங்கள் தொகுதிக்கு வந்துள்ளீர்கள். இங்கு கட்சி அலுவலகம் உள்ளது. தொண்டர்கள், தலைவர்கள் உள்ளனர். ஆனால் நீங்கள் மாவட்டத்துக்கு வந்ததை, ஒருவரிடம் தெரிவிக்கவில்லையே?'' என கேட்டார்.
இதனால் கோபமடைந்த அமைச்சர், ''இதை கேட்க நீ யார்? உனக்கு தகுதி இல்லை,'' என்றார்.
அந்நபர், வாக்குறுதி நிறைவேற்றும் கமிட்டி நியமன உறுப்பினர் குட்டேனகவுடா பாட்டீல் என்று தெரிவித்தார்.
அமைச்சர், ''லிங்கசுகூர் வர வேண்டும் என்று வரவில்லை. வேறு இடத்திற்கு செல்வதால் இங்கு வந்தேன். இனிமேல் என்னிடம் இதுபோன்று முட்டாள்தனமாக பேச வேண்டாம்,'' என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
''எங்களை முட்டாள்கள் என்று கூறிய அமைச்சர், மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என குட்டேனகவுடா பாட்டீல் வலியுறுத்தி உள்ளார்.
அங்கிருந்த கட்சியின் மற்ற உறுப்பினர்கள், அவரை சமாதானம் செய்தனர். அமைச்சரை வழிமறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

