/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு புறநகர் ரயில் முதல்கட்ட பணிகள் தாமதம் ஏன்? மத்திய ரயில்வே இணை அமைச்சர் விளக்கம்
/
பெங்களூரு புறநகர் ரயில் முதல்கட்ட பணிகள் தாமதம் ஏன்? மத்திய ரயில்வே இணை அமைச்சர் விளக்கம்
பெங்களூரு புறநகர் ரயில் முதல்கட்ட பணிகள் தாமதம் ஏன்? மத்திய ரயில்வே இணை அமைச்சர் விளக்கம்
பெங்களூரு புறநகர் ரயில் முதல்கட்ட பணிகள் தாமதம் ஏன்? மத்திய ரயில்வே இணை அமைச்சர் விளக்கம்
ADDED : ஆக 30, 2025 03:34 AM

பெங்களூரு: ''பெங்களூரு புறநகர் ரயில் திட்ட முதல்கட்ட பணிகள், 2026 இறுதிக்குள் முடிவடைய வாய்ப்பில்லை,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
பெங்களூரு புறநகர் பகுதிகளில் நடந்து வரும் ரயில்வே சுரங்கப்பாதை, ரயில்வே மேம்பாலம் பணிகள் குறித்து தென்மேற்கு ரயில்வே, பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு மேம்பாட்டு ஆணையம், குடிநீர் வாரியம், கேரைடு, பெஸ்காம் அதிகாரிகளுடன், மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா நேற்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்துக்கு பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் நான்கு வழித்தடங்களில் நடந்து வருகின்றன. இதில் இரண்டு வழித்தடப் பணிகள், நிலம் கையகப்படுத்துதல்; ஒப்பந்தத்தில் இருந்து எல் அண்ட் டி நிறுவனம் விலகியது உட்பட பல காரணங்களால் மெதுவாக நடந்து வருகின்றன. எனவே, பெங்களூரு புறநகர் ரயில் திட்ட முதல்கட்ட பணிகள், 2026 இறுதிக்குள் முடிவடைய வாய்ப்பில்லை.
இதுதொடர்பாக, மாநில தலைமை செயலருக்கு கடிதம் எழுதி உள்ளேன். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து விவாதிப்பேன். 15 முதல் 20 நாட்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை சந்தித்து, பணிகள் குறித்து விவாதிப்பேன். சில பணிகளுக்கு மாநில அரசு, தன் பங்கு நிதியை வழங்கவில்லை.
பெங்களூரில் 14 ரயில்வே மேம்பாலப் பணிகள் தாதமாகி வருகின்றன. இவற்றை, வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க, நகர மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலர் துஷார் கிரிநாத் தலைமையில் ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்படும். இக்கமிட்டியில் ரயில்வே துறை, மாவட்ட கலெக்டர்கள், போக்குவரத்து இணை கமிஷனர்களும் இணைக்கப்படுவர்.
இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டம் நடத்தப்படும். அப்போது அது வரை செய்யப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.
பெங்களூரு நகரில் ரயில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, தேவனஹள்ளி ரயில் மிகப்பெரிய ரயில்வே முனையம் அமைக்கப்படும். இதன் மூலம் விமான நிலையத்திற்கு செல்லும் பயணியருக்கு வசதியாக இருக்கும். இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
பெங்களூரு கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையம், 1,370 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும். கூடுதல் நடைமேடைகள் அமைக்க 222 கோடி ரூபாய்க்கு டெண்டர் அழைக்கப் பட்டுள்ளது.
யஷ்வந்த்பூர் ரயில் நிலையம், 450 கோடி ரூபாயில் நவீனமயமாக்கல் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.