/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
என்.ஐ.ஏ.,விடம் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை ஒப்படைக்க தயங்குவது ஏன்?: அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் போவதாக பரமேஸ்வர் அறிவிப்பு
/
என்.ஐ.ஏ.,விடம் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை ஒப்படைக்க தயங்குவது ஏன்?: அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் போவதாக பரமேஸ்வர் அறிவிப்பு
என்.ஐ.ஏ.,விடம் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை ஒப்படைக்க தயங்குவது ஏன்?: அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் போவதாக பரமேஸ்வர் அறிவிப்பு
என்.ஐ.ஏ.,விடம் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை ஒப்படைக்க தயங்குவது ஏன்?: அதிகாரிகளுடன் ஆலோசிக்கப் போவதாக பரமேஸ்வர் அறிவிப்பு
ADDED : ஜூன் 10, 2025 02:26 AM

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பன்ட்வாலை சேர்ந்தவர் பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி, 35. மே 1ம் தேதி இரவு மங்களூரு கின்னிபதவு என்ற இடத்தில், நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலையை அடுத்து, மங்களூரில் மே 29ம் தேதி சரக்கு வாகன ஓட்டுநர் அப்துல் ரஹீம், 29, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சி.சி.பி., போலீசார், மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
சுகாஸ் ஷெட்டி கொலையில், பி.எப்.ஐ., அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், இக்கொலைக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாகவும், கர்நாடக பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இவ்வழக்கை, என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும் என, போர்க்கொடி துாக்கினர்.
இதுதொடர்பாக, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்தும் மனு அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் முறையிட்டனர்.
நிலைமையை கவனித்த மத்திய உள்துறை அமைச்சகம், சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை, என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றும்படி, கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
முடிவு
இக்கடிதம் தொடர்பாக, பெங்களூரில் நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
பஜ்ரங்தள் பிரமுகரும், ரவுடியுமான சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை, என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்கும்படி, மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியது யார் என்று தெரியவில்லை. இவ்வழக்கை, நம் மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏன் இப்படி செய்கின்றனர் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
என்.ஐ.ஏ.,விடம் வழக்கை ஒப்படைத்தால், குறிப்பிட்ட சமுதாய மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று அரசு அஞ்சுகிறது. ஏற்கனவே, அப்துல் ரஹீம் கொலை சம்பந்தமாக, தட்சிண கன்னடா மாவட்டத்தின் காங்கிரசில் உள்ள முஸ்லிம் தலைவர்கள், ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த முதல்வர் சித்தராமையா, மாவட்டத்தின் முக்கிய தலைவரை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால், அவர்களை சமாதானப்படுத்த ஹிந்து தலைவர்கள் வீடுகளில் சோதனை, கைது, மாவட்டத்தை விட்டு வெளியேற்றும் சம்பவங்கள் நடந்தன.
மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதம் தொடர்பாக, மாநில அட்வகேட் ஜெனரலிடம் சட்ட ஆலோசனை பெறும்படி, மாநில டி.ஜி.பி., சலீமுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
- சித்தராமையா,
முதல்வர்