ADDED : மே 09, 2026 02:16 AM

கொப்பால்: ' 'எடியூரப்பாவுக்கு பாராட்டு தெரிவித்து, விழா நடத்துவது எதற்காக,'' என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுக்கு, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நமது நாட்டின் மற்ற மாநிலங்களில், பா.ஜ., ஆட்சிக்கு வரும் போது, கர்நாடக மக்கள் சந்தோஷப்படுகின்றனர். ஆனால், நமது மாநிலத்தில், பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதில், விஜயேந்திராவுக்கு துளி கூட எண்ணம் இல்லை.
எடியூரப்பாவும், விஜயேந்திராவும் கட்சி பதவியில் இருக்கும் வரை, பா.ஜ., அலுவலகத்தில் நான் கால் வைக்க மாட்டேன். விஜயேந்திரா தலைவர் பதவியை ஏற்றதில் இருந்து, கட்சி தொடர் தோல்விகளை சந்திக்கிறது.
பா.ஜ., - எம்.பி.,க்கள் எண்ணிக்கை, 25ல் இருந்து, 17 ஆக குறைந்து விட்டது. இடைத்தேர்தல்களில் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில், சித்ரதுர்காவில் எடியூரப்பாவுக்கு பாராட்டு விழா நடத்துவது ஏன் என்று தெரியவில்லை.
ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்ததற்காக, இந்த விழாவை ஏற்பாடு செய்து உள்ளனரா... கட்சி மேலிடம் முன், நாங்கள் தான் பெரிய லிங்காயத் தலைவர்கள் என்று காட்டி கொள்ள, இந்த விழாவை நடத்துகின்றனரா என்றும் தெரியவில்லை.
விழா நடக்கும் இடத்தில், எடியூரப்பா பயன்படுத்திய அம்பாசிடர் காரை நிறுத்தி வைத்து உள்ளனர். எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார்.
லிங்காயத் சமுதாயத்திற்கு அவர் அளித்த பங்களிப்பு என்ன... பணம் சம்பாதிப்பது, அதிகாரத்தில் இருப்பது மட்டுமே எடியூரப்பா குடும்பத்தின் குறிக்கோள்.
துணை முதல்வர் சிவகுமாரை போல, மனசாட்சி இல்லாத தலைவரை நான் பார்த்தது இல்லை. அவரை விட முதல்வர் சித்தராமையாவே சிறந்தவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடியூரப்பாவுக்கு, பா.ஜ., சார்பில் இன்று பாராட்டு விழா நடக்கிறது.
