அஹிந்தா சமூகம் மீது திடீர் பாசம் ஏன்? பா.ஜ.,வுக்கு சித்தராமையா கேள்வி
அஹிந்தா சமூகம் மீது திடீர் பாசம் ஏன்? பா.ஜ.,வுக்கு சித்தராமையா கேள்வி
ADDED : ஏப் 03, 2026 04:02 AM

தாவணகெரே: ''அஹிந்தா சமூகம் மீது பா.ஜ.,வுக்கு திடீர் பாசம் வந்தது ஏன்,'' என, முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.
தாவணகெரே தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் சமர்த்தை ஆதரித்து, முதல்வர் சித்தராமையா நேற்று, 2வது நாளாக பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:
தாவணகெரே தெற்கில், முஸ்லிம் சமூகத்திற்கு சீட் கொடுக்காமல், அஹிந்தா என்ற, பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு காங்கிரஸ் அநீதி செய்தததாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். எப்போதுமே ஹிந்து, ஹிந்துத்வா என்று பேசும் அவர்களுக்கு, அஹிந்தா சமூகம் மீது எப்படி திடீர் பாசம் வந்தது. அவர்கள் நடிப்பு மக்களிடம் எடுபடாது. சமூகத்தில் சமத்துவ தன்மையை நிலைநாட்டுவோம். நாங்கள் சமூகத்தை பிளவுபடுத்தும் கட்சி இல்லை.
ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்தது. அரசு கருவூலம் காலியாகி விடும்; லோக்சபா தேர்தலுக்கு பின் வாக்குறுதி திட்டம் நிறுத்தப்படும் என்றெல்லாம், பொய் பிரசாரம் செய்தனர். என்னை கடன் ராமையா என்று கிண்டல் செய்கின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு உட்பட்டே கடன் வாங்குகிறோம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டில் அறிவித்ததை வழங்கவில்லை. அரசின் கடன் விபரங்களை சட்டசபையில் முன்வைத்தேன். ஆனாலும், என்னை விமர்சிக்கின்றனர். இங்கு, பா.ஜ., ஆட்சியில் இருந்த போது, 5.30 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர்.
நம் வேட்பாளர் சமர்த் இளைஞர், படித்தவர். நான், 30 வயதில் எம்.எல்.ஏ., ஆனேன். சமர்த்தின் தந்தை மல்லிகார்ஜுன் 28 வயதில் எம்.எல்.ஏ., ஆனார். சமர்த்தும், 26 வயதில் எம்.எல்.ஏ., ஆக வேண்டும். அவரது தாத்தா சாமனுார் சிவசங்கரப்பாவை விட ஒரு படி மேலே உள்ளார். அவர் 50,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
