/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சரவை கூட்டம் இடம் மாற்றம் ஏன்?
/
அமைச்சரவை கூட்டம் இடம் மாற்றம் ஏன்?
ADDED : ஜூன் 18, 2025 11:19 PM
பெங்களூரு: கர்நாடகாவில் நடப்பாண்டு ஏப்ரலில் சாம்ராஜ் நகர் மாவட்டம் மலை மஹாதேஸ்வரா மலையில், அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. சாம்ராஜ் நகர், மைசூரு, மாண்டியா மாவட்ட மேம்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
அதுபோன்று, சிக்கபல்லாபூர் மாவட்டத்தின் சுற்றுலா தலமான நந்தி மலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான பணிகளை மாவட்ட பொறுப்பு அமைச்சர், உள்ளூர் எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் செய்து வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு உள்ளூர் லாட்ஜ்களில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. மலையில் உள்ள போகநந்தீஸ்வரர் கோவிலுக்குள் நுழைய, சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது. அங்குள்ள கட்டடங்களுக்கு புதிய வர்ணம் பூசப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலையில், அமைச்சரவை கூட்டம் நந்தி மலையில் நடக்காது; பெங்களூரு விதான் சவுதாவிலேயே நடக்கும் என, மாநில அரசு அறிவித்தது.
அரசின் இம்முடிவால் மாவட்ட பொறுப்பு அமைச்சர், உள்ளூர் எம்.எல்.ஏ., காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கூட்டத்தை எதிர்பார்த்த பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர், அமைப்பினர் ஏமாற்றம் அடைந்தனர்.
காரணம் குறித்து விசாரித்தபோது, 'கோலார், சிக்கபல்லாபூர் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சரவை கூட்டத்தில், மானியங்கள், திட்டங்களை அறிவிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையாவை வற்புறுத்தினர்.
இவ்விஷயத்தில் முதல்வர் உறுதியான வாக்குறுதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நந்தி மலையில் அமைச்சரவை கூட்டம் நடத்தி, எம்.எல்.ஏ.,க்கள், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவில்லை என்றால், அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், கடைசி நிமிடத்தில் பெங்களூருக்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.