ADDED : ஜூன் 30, 2026 04:51 AM

மைசூரு: சேலையால் கணவர் கழுத்தை நெரித்து, கொலை செய்துவிட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.
மைசூரு நகரின், ஹுட்கோ லே - அவுட்டில் வசித்தவர் நித்யானந்தா, 50. இவர் மஹிந்திரா ஷோரூமில் மேலாளராக பணியாற்றினார்.
இவரது மனைவி சுசீலா, 44. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். வீட்டில் தம்பதி மட்டுமே வசித்தனர்.
இவர்களுக்கு திருமணமாகி 25 ஆண்டுகளாகியும், குழந்தை பிறக்கவில்லை. இது, தம்பதிக்கிடையே விரிசலை ஏற்படுத்தியது.
இதற்கிடையே குடிப்பழக்கத்துக்கு அடிமையான நித்யானந்தா, தினமும் குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறு செய்வார்.
நேற்று முன் தினம் இரவும், வழக்கம் போன்று குடிபோதையில் வந்தார். மனைவியுடன் வாக்குவாதம் செய்துவிட்டு, படுத்து உறங்கினார். கோபமடைந்த மனைவி சுசீலா, சேலையால் கணவரின் கழுத்தை நெரித்து, கொலை செய்தார்.
அதன்பின் அலறி கூப்பாடு போட்டு அக்கம், பக்கத்தினரை அழைத்து, தன் கணவர் மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடினார். இறுதி சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்தார்.
நேற்று காலை உறவினர்கள் அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது நித்யானந்தாவின் கழுத்தில் காய அடையாளம் இருப்பதை கவனித்த அவரது சகோதரர், போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு வந்த குவெம்பு நகர் போலீசார், விசாரணையை துவக்கினர். சந்தேகத்தின்படி, சுசீலாவை விசாரித்த போது, கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்தனர்.
