ADDED : ஜூலை 08, 2026 11:11 PM

பெங்களூரு: கள் ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கழுத்தை நெரித்த கொன்ற வழக்கில், மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
பெங்களூரின் யஷ்வந்த்பூர் கே.என்., லே - அவுட்டில் வசித்தவர் சதீஷ். இவரது மனைவி கல்பனா, 35. தம்பதிக்கு குழந்தை இல்லை.
கல்பனாவுக்கும், ஜாவேத் பாஷா, 37, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர்.
கடந்த, 2017ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி, கல்பனா தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதுபற்றி அறியாத சதீஷ், மனைவி காணாமல் போனதாக போலீசில் புகார் செய்தார். போலீஸ் நடத்திய விசாரணையில் கல்பனா, கள்ளக்காதலனுடன் ஓடியது தெரிந்தது. இருவரும் மீட்கப்பட்டனர்.
சதீஷ், கல்பனாவை மன்னித்து ஏற்று கொண்டார். ஆனாலும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த கல்பனா, சதீஷை கொல்ல முடிவு செய்தார்.
அதன்படி, கடந்த, 2017 மே 22ம் தேதி, சதீஷுக்கு துாக்க மாத்திரைகள் கொடுத்தார். ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த அவரை, துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கல்பனாவும், ஜாவேத் பாஷாவும் கொலை செய்தனர்.
யஷ்வந்த்பூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். பெங்களூரு 67வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.
கடந்த 9 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி ஜெயபிரகாஷ் நேற்று தீர்ப்பு கூறினார். கல்பனா, ஜாவேத் பாஷா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனதால், இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும், தலா, 25,000 ரூபாய் அபராதமும் விதித்தார்.
அபராதம் கட்டவில்லை என்றால், கூடுதலாக, ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
