காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி தற்கொலை பி.ஜி., உரிமையாளர்கள் உட்பட நால்வர் கைது
காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமி தற்கொலை பி.ஜி., உரிமையாளர்கள் உட்பட நால்வர் கைது
ADDED : ஜூலை 08, 2026 11:12 PM
ஷிவமொக்கா: சிறுமி காணாமல் போன சம்பவத்தில், ஓராண்டுக்கு பின், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் உடலை சூட்கேசில் அடைத்து வீசிய, பி.ஜி., உரிமையாளர் உட்பட, நால்வர் கைது செய்யப்பட்டனர்.
ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகாவின், சோகிலு கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா, 15. சில ஆண்டுகளுக்கு முன், இவரது தாய் இறந்துவிட்டார். தந்தையுடன் இருக்க பிடிக்காமல், ஷிகாரிபுராவுக்கு வந்தார்.
இங்குள்ள பி.ஜி., எனும், 'கெஸ்ட் ஹவுசில்' சேர்ந்தார். இந்த பி.ஜி., இட்டிகேஹள்ளி கிராமத்தின், பா.ஜ., பிரமுகர் கங்கா நாயக் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சவுபாக்யா என்ற பாக்யஸ்ரீக்கு சொந்தமானது.
பி.ஜி., உரிமையாளரான சவுபாக்யா, சிறுமி சங்கீதாவை நன்றாக கவனித்து கொண்டார். எட்டாம் வகுப்பு வரை படித்த சிறுமி, அதே பி.ஜி.யில் பணியாற்றியும் வந்தார்.
கடந்த, 2025ம் ஆண்டு மே 18ம் தேதி, பி.ஜி.,யில் தங்கியிருந்த ரஞ்சிதாவுக்கும், சிறுமி சங்கீதாவுக்கும் ஏதோ காரணத்தால், சண்டை வந்தது.
அந்த சிறுமியை, ரஞ்சிதாவும், பீர்யா நாயக் என்பவரும், பி.ஜி., கட்டடத்தின் கீழ் தளத்தில் உள்ள பியூட்டி பார்லருக்கு வரவழைத்து, திட்டினர். கண் மூடித்தனமாக தாக்கினர்.
இதனால் மனம் நொந்த சங்கீதா, அறைக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்டு பி.ஜி., உரிமையாளர்கள், சிறுமி தற்கொலை விஷயம் வெளியே தெரிந்தால், பி.ஜி.,க்கு கெட்ட பெயர் ஏற்படும். சட்ட சிக்கல் ஏற்படும் என, அஞ்சினர். எனவே, யாருக்கும் தெரியாமல், சிறுமியின் உடலை ரகசியமாக அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.
பெரிய சூட்கேசில் சிறுமியின் உடலை வைத்து, பூட்டு போட்டனர். இதை காரில் துாக்கி சென்று, உத்தர கன்னட மாவட்டம், சித்தாபுரா தாலுகாவின், மாவினகுன்டியில் உள்ள, ஆழமான பள்ளத்தாக்கில் வீசினர்.
சிறுமி உயிரோடு இருப்பதை போல, குடும்பத்தினரை நம்ப வைத்தனர். அவரது மொபைல் போனை மறைத்து வைத்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன், ரஞ்சிதாவுக்கும், பீர்யா நாயக்குக்கும் ஏதோ காரணத்தால் சண்டை ஏற்பட்டது. அப்போது சிறுமியை இருவரும் கொன்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த தகவல், அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும் தெரிந்து, பி.ஜி.,க்கு வந்தனர். அங்கு சிறுமி இல்லாததால், 'மகளை காணவில்லை' என, ஷிகாரிபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார், விசாரித்த போது, சிறுமி சங்கீதாவுடன், கடைசியாக பேசியது ரஞ்சிதா என்பதை அறிந்து, அவரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, விசாரித்த போது நடந்த சம்பவத்தை விவரித்தார்.
அதன் பின், சிறுமியை தற்கொலைக்கு துாண்டிய ரஞ்சிதா, பீர்யா நாயக், உடலை மறைத்த பி.ஜி., உரிமையாளர்கள் கங்காநாயக், சவுபாக்யா ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து, ஷிவமொக்கா எஸ்.பி., நிகில் அளித்த பேட்டி:
சிறுமி தற்கொலை செய்து கொண்ட விஷயத்தை, போலீசாரிடம் கூறியிருந்தால், இது இந்த அளவுக்கு கிரிமினல் வழக்காக ஆகியிருக்காது. உடலை மூடி மறைத்திருப்பது, விசாரணையில் தெரிந்தது.
மாவினகுன்டி பள்ளத்தாக்கில் தேடிய போது, சிறுமி உடலின் சில எலும்புகள் கிடைத்தன. இந்த எலும்புகள், சிறுமியுடையதா என்பதை உறுதிப்படுத்த, தடய ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
