ADDED : ஏப் 14, 2026 06:07 AM
பெங்களூரு: வேலையில்லாத கணவரிடம் இருந்து கூடுதல் ஜீவனாம்சம் கேட்ட மனைவியின் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெங்களூரை சேர்ந்த தம்பதிக்கு 2009 ல் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், நாட்கள் செல்ல செல்ல தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2015ல் குடும்ப நல நீதிமன்றத்தில், மனைவி தாக்கல் செய்த மனுவில், 'என் கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு நெருக்கடி கொடுக்கிறார். மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
மனுவை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், 'மனைவியை துன்புறுத்த கூடாது. மாதந்தோறும் மனைவிக்கு வீட்டு வாடகையாக 5,000 ரூபாய், பராமரிப்புக்காக 4,000 ரூபாய், ஜீவனாம்சமாக 40,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, 57 வது கூடுதல் நகர சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில், 2016 ல் 'தன் மீதான துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய கோரி' கணவர் மேல்முறையீடு செய்திருந்தார். இதை ஏற்காத நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கணவரும்; கூடுதல் ஜீவனாம்சம் கேட்டு மனைவியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு, கடந்த 11 ம் தேதி நீதிபதி ஸ்ரீஷானந்தா முன் விசாரணைக்கு வந்தது. கணவர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'என் மனுதாரர் முன்னர் நடத்தி வந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டு உள்ளது. அவர் வேலையில்லாமல் உள்ளார். ஆனால் விவாகரத்து பெற்ற அவரது மனைவி, மாதம் 1.50 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகிறார். எனவே, கணவரால் பராமரிப்பு தொகை வழங்க இயலாது' என்றார்.
மனைவி தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'கணவரின் மூதாதையர்கள் சொத்தில் பங்கு உள்ளது. அவரது பெயரிலும் சொத்துகள் உள்ளன. இத்தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். என் மனுதாரருக்கு ஜீவனாம்சம் வழங்குவதில் எதிர் தரப்புக்கு எந்த இடையூறும் இல்லை,' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஸ்ரீஷானந்தா கூறியதாவது:
கணவருக்கு சேர வேண்டிய மூதாதையர் சொத்து இன்னும் பங்கிடப்படவில்லை. பூர்வீக சொத்து உள்ளது என்பதற்காக, பராமரிப்பு தொகையை உயர்த்த முடியாது. கணவர் ஒரு ஏக்கர் நிலம் வைத்து உள்ளார். இந்த நிலத்தையும், இருமுறை அடமானம் வைத்து, கடன் வாங்கி உள்ளார். இதுனால், அவர், பராமரிப்பு தொகை வழங்க விரும்பவில்லை என்பது தெரிகிறது. தற்போது மனைவி வேலைக்கு செல்கிறார்; கணவர் வேலையின்றி உள்ளார். எனவே, கூடுதல் ஜீவனாம்சம் கோரிய மனைவி மனுவும்; தன் மீது பதிவான துன்புறுத்தல் வழக்கை ரத்து செய்ய கோரிய கணவரின் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
