ADDED : ஜூன் 20, 2025 11:12 PM
ஷிவமொக்கா:காட்டு யானை தாக்கியதில் காவலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஷிவமொக்கா, பத்ராவதி தாலுகா கெஞ்சம்மனா மலை பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் காவலாளியாக பணிபுரிந்தவர் குமார், 53. இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, பணிக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் வந்த காட்டு யானை, குமாரை தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பத்ராவதி மண்டல வன அலுவலர் துர்கப்பா சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். பின் அவர் அளித்த பேட்டி:
ஷிவமொக்கா, பண்டிகுடா கிராமத்தைச் சேர்ந்த குமார், ஒற்றை காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதி அடர்ந்த வனத்தால் சூழப்பட்டு உள்ளது. இங்கு யானைகள் உட்பட பல வன விலங்குகள் உள்ளன. இப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் குடும்பத்துக்கு, வனத்துறை 20 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.