ADDED : ஏப் 26, 2026 12:17 AM
ராம்நகர்: காவிரி ஆற்றில் விளையாடி கொண்டிருந்த சுற்றுலா பயணியரை, காட்டு யானை விரட்டியதில், ஒரு பெண் காயம் அடைந்தார்.
ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகா சங்கமா வனப்பகுதியின் மேகதாதுக்கு வரும், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு பாயும் காவிரி ஆற்றில் நீச்சலடித்து விளையாடி மகிழ்வர். அதேபோன்று, நேற்று காலையும் சுற்றுலா பயணியர், காவிரி ஆற்றில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது. யானையை பார்த்த சுற்றுலா பயணியர், அலறி அடித்துக் கொண்டு சிதறி ஓடினர். ஒரு பெண் மட்டும் யானையிடம் சிக்கினார். அவரை தும்பிக்கையால் தாக்கிய யானை வனத்துக்குள் சென்று விட்டது.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். காயமடைந்த பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர். யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கின்றனர். கோடிஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
