UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 06:44 PM
சாம்ராஜ்நகர்: வனப்பகுதி சாலையில் காரில் சென்ற நபர்கள், வழியில் காட்டு யானையை கண்டு, காரில் இருந்து இறங்கி மொபைல் போனில் போட்டோ எடுத்து, யானைக்கு தொல்லை கொடுத்தனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், சத்யமங்கலா புலிகள் சரணாலயத்தின், தேசிய நெடுஞ்சாலை – 948ல் இரவு 9:00 மணி முதல், காலை 6:00 மணி வரை, வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரவில் வாகன போக்குவரத்தால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. சாலையை கடந்து செல்லும் விலங்குகள் மீது, வாகனம் மோதும் அபாயம் உள்ளது என்பதாலும், மக்களின் பாதுகாப்பை கருதியும், வாகன போக்குவரத்துக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
ஆனால், இந்த தடையை பொருட்படுத்தாமல், பலரும் வாகனங்களில் செல்கின்றனர். வன விலங்குகளின் நிம்மதியை குலைக்கின்றனர். வனப்பகுதி சாலையில் பயணிக்கும் போது, வன விலங்குகளை கண்டால் வாகனத்தை நிறுத்தவோ, கீழே இறங்கவோ கூடாது.
ஆனால், இந்த விதிமுறைகளை அலட்சியப்படுத்துகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, இந்த நெடுஞ்சாலையில் இருவர், காரில் சென்றனர். அப்போது காட்டு யானை சாலை ஓரமாக நடந்து வந்தது.
இதை கவனித்த நபர்கள், காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினர். மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். யானையை விரட்டி சென்று சீண்ட முற்பட்டனர். யானையின் நிம்மதிக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையை பலரும் வலியுறுத்துகின்றனர்.
