'கும்கி'யை குத்தி கொன்ற காட்டு யானை: பராமரிப்பு முகாமில் புகுந்து ஆவேசம்
'கும்கி'யை குத்தி கொன்ற காட்டு யானை: பராமரிப்பு முகாமில் புகுந்து ஆவேசம்
UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 10:44 PM

மைசூரு: மைசூரு அருகே, யானைகள் பராமரிப்பு முகாமில் புகுந்த மதம் பிடித்த காட்டு யானை, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த கும்கியை தந்தத்தால் குத்தி கொன்றது.
மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகா தொட்டஹரவே கிராமத்தில், காவிரி யானைகள் பராமரிப்பு முகாம் உள்ளது. இங்கு ராமையா, 39, என்ற கும்கி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு, கும்கி யானை, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, பராமரிப்பு முகாமின் சோலார் மின்வேலியை முறித்து கொண்டு உள்ளே புகுந்தது. சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த கும்கியுடன், சண்டைக்கு சென்றது. இரு யானைகளும் ஆக்ரோஷமாக சண்டையிட்டன.
யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு பாகன்கள், வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். நீண்ட நேரம் போராடி, காட்டு யானையை வனத்திற்குள் விரட்டி அடித்தனர்.
காட்டு யானை தந்தத்தால் குத்தியதில், கும்கி ராமையாவின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தது. நேற்று காலை கும்கியின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
வனத்துறை ஊழியர்கள் கூறுகையில், 'பொதுவாக முகாம்களில் பராமரிக்கப்படும் கும்கிகளை இரவில் சங்கிலியால் கட்டி வைப்பது வழக்கம். மதம் பிடித்த காட்டு யானை முகாமில் புகுந்து, கும்கி ராமையாவுடன் சண்டை போட்டது. ராமையாவும் தனது முழு பலத்துடன் மோதியது.
'ஆனாலும் காட்டு யானையின் கூர்மையான தந்தம், ராமையா உடலில் பல இடங்களில் குத்தியதால், தீவிர காயம் அடைந்து இறந்து விட்டது. காட்டிற்குள் சென்ற யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கிறோம்' என்றனர்.
சிக்கிய 2 யானைகள்
ஹாசன் மாவட்டம், பேலுாரில் யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்ததை அடுத்து, 10 ஆண் யானைகளை பிடிக்கும் பணியில், ஏழு கும்கி யானைகள் ஈடுபட்டுள்ளன. மூன்றாவது நாளான நேற்றைய தேடுதல் வேட்டையில், சக்லேஸ்பூர் பகுதியில் இரண்டு யானைகள் சுற்றித் திரிவது, 'ட்ரோன்' மூலம் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு உடனடியாக கும்கிகளுடன் வன அதிகாரிகள் சென்றனர்.
முத லில், இரண்டு யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இது, யானைகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மீண்டும் மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, யானையை பிடிக்கும் முயற்சியில் கும்கிகள் இறங்கின. பெரும் போராட்டத்துக்கு பிறகு இரண்டு யானைகளும் பிடிபட்டன. பிடிபட்ட யானைகளை எந்த முகாமிற்கு அழைத்து செல்வது என்பது குறித்து வன அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர். காட்டுப் பகுதியில் சுற்றித்திரியும் மீதமுள்ள யானைகளை பிடிக்கும் முயற்சிகளும் நடக் கின்றன.
