முஸ்லிம்களின் 80,140 ஓட்டுகளை இழக்குமா காங்கிரஸ்?
முஸ்லிம்களின் 80,140 ஓட்டுகளை இழக்குமா காங்கிரஸ்?
ADDED : மார் 18, 2026 05:21 AM
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மேட்டி, சாமனுார் சிவசங்கரப்பா மறைவால் காலியான, பாகல்கோட், தாவணகெரே தெற்கு தொகுதிகளில், அடுத்த மாதம், 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தல் முடிவுகள் மே, 4ல் வெளியாகின்றன. பாகல்கோட்டில் மேட்டி குடும்பத்தில் ஒருவருக்கு சீட் கிடைப்பது உறுதி. பா.ஜ., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., வீரண்ணா சரந்திமத் போட்டியிடுவதும் உறுதியாகி உள்ளது.
ஆனால், தாவணகெரே தெற்கில் சீட் கொடுக்கும் விஷயத்தில், காங்கிரஸ், பா.ஜ., இரு கட்சியிலும் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. சாமனுார் சிவசங்கரப்பாவின் மகனும், கர்நாடக தோட்டக்கலை துறை அமைச்சருமான மல்லிகார்ஜுன், தன் மகன் சமர்த்துக்கு சீட் கேட்கிறார். வீட்டு வசதி அமைச்சர் ஜமீர் அகமது கான், முஸ்லிம் சமூகத்தில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பதால், இரு அமைச்சர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவுகிறது.
லிங்காயத் சமூகம் தாவணகெரே தெற்கில், 2,31,683 வாக்காளர்கள் உள்ளனர். இதில், முஸ்லிம் சமூக ஓட்டுகள் 80,140. கிறிஸ்துவ சமூக ஓட்டுகள் 208. மீதமுள்ள, 1 லட்சத்து 51 ஆயிரத்து 475 ஓட்டுகள் லிங்காயத், எஸ்.சி., - எஸ்.டி., குருபா, மராத்தா உள்ளிட்ட ஹிந்து சமூகங்களை சேர்ந்தவை. இத்தொகுதியில் வேட்பாளரின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதில் முஸ்லிம், லிங்காயத் சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தாவணகெரே தெற்கு முன்னர், தாவணகெரே தொகுதியாக இருந்தது. 1952 முதல் 2004 வரை, 12 தேர்லை சந்தித்து உள்ளது. இதில், கம்யுனிஸ்ட் மூன்று முறையும், பிரஜா சோசலிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றன. சுயேச்சை ஒரு முறையும், காங்கிரஸ் ஏழு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த, 2008ல் தொகுதி மறுசீரமைப்புக்கு பின், தாவணகெரே தெற்கு தொகுதியாக மாறியது. அதற்கு பின் நடந்த நான்கு தேர்தலிலும், காங்கிரசின் சாமனுார் சிவசங்கரப்பா தான் வெற்றி பெற்று உள்ளார். இங்கு ஒரு முறை கூட பா.ஜ., வெற்றி பெற்றது இல்லை.
பதவி ராஜினாமா முஸ்லிம்கள் தங்களுக்கு ஆதரவாக உள்ள கட்சி என்பதால், காங்கிரசை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். அகில பாரத வீரசைவ லிங்காயத் மகாசபை தலைவராக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சாமனுார் சிவசங்கரப்பா பதவி வகித்ததால், லிங்காயத் ஓட்டுகளும் அவருக்கு விழுந்தன. இதனால், அவர் தொடர்ந்து வெற்றி வாகை சூடினார்.
அவரது மரணத்திற்கு பின், தாவணகெரே தெற்கில் போட்டியிட தங்களுக்கு ஒரு வாய்ப்பு தரும்படி, முஸ்லிம் சமூகம் வேண்டுகோள் வைத்து உள்ளது. சாமனுார் சிவசங்கரப்பா உயிருடன் இருந்த போது, 'அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன்.
முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற வைக்கிறேன் என்று கூறியதாக, முஸ்லிம் சமூகத்தினர் கூறுகின்றனர். என்னிடம் அப்பா அப்படி சொல்லவே இல்லை' என, அமைச்சர் மல்லிகார்ஜுன் அடித்து கூறுகிறார்.
மகன் சமர்த்துக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால், தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவிலும் மல்லிகார்ஜுன் உள்ளார்.
ஏற்கனவே அவர் முதல்வரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும், முதல்வர் அதை ஏற்க மறுத்ததாகவும் தகவல் வெளியானது. தந்தையின் தொகுதி தங்கள் குடும்ப கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, அமைச்சர் நினைக்கிறார்.
ஷிகாவி வெற்றி கடந்த, 2024ல் ஹாவேரியின் ஷிகாவி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், முஸ்லிம் சமூகத்தின் யாசிர் அகமதுகான் பதான் வெற்றி பெற்றார்.
அந்த தொகுதியிலும் வேட்பாளர்கள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக, லிங்காயத் ஓட்டுகள் தான் உள்ளன. இதனால், தாவணகெரே தெற்கிலும் லிங்காயத் சமூகம் தங்களை ஆதரிக்கும் என்பது, முஸ்லிம் தலைவர்கள் வாதமாக உள்ளது.
ஒருவேளை அமைச்சர் மிரட்டலுக்கு அடிபணிந்து அவரது மகனுக்கே சீட் கொடுத்தால், முஸ்லிம் சமூகம் காங்கிரசுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பும் உள்ளது.
காங்கிரஸ் மீதான கோபத்தில், ஓட்டை மாற்றி போட்டால், பா.ஜ., வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளது.
தாவணகெரே தெற்கில் முஸ்லிம் ஓட்டுகள் தான் வெற்றியை பெற்றுத் தரும் என்பது, காங்கிரஸ் மேலிடத்திற்கு நன்கு தெரியும். அச்சமூகத்தின் 80,140 ஓட்டுகளை இழக்க, காங்கிரஸ் கண்டிப்பாக நினைக்காது.
தாவணகெரே தெற்கில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது, இன்னும் மதில் மேல் பூனையாகவே உள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் விடை கிடைத்துவிடும்.
- நமது நிருபர் -
