/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனார்த்தன ரெட்டி சொத்துகள் பறிமுதல் ஆகுமா?: காங்கிரஸ் 'மாஜி' எம்.பி., அரசுக்கு கோரிக்கை
/
ஜனார்த்தன ரெட்டி சொத்துகள் பறிமுதல் ஆகுமா?: காங்கிரஸ் 'மாஜி' எம்.பி., அரசுக்கு கோரிக்கை
ஜனார்த்தன ரெட்டி சொத்துகள் பறிமுதல் ஆகுமா?: காங்கிரஸ் 'மாஜி' எம்.பி., அரசுக்கு கோரிக்கை
ஜனார்த்தன ரெட்டி சொத்துகள் பறிமுதல் ஆகுமா?: காங்கிரஸ் 'மாஜி' எம்.பி., அரசுக்கு கோரிக்கை
ADDED : மே 07, 2025 11:18 PM

பெங்களூரு: 'கனிம சுரங்க முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டியின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்' என அரசுக்கு, பல்லாரி காங்கிரஸ் முன்னாள் எம்.பி., உக்ரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
கனிம சுரங்க முறைகேடு வழக்கில், கொப்பால் கங்காவதி தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டிக்கு, 63, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஹைதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது.
இதையடுத்து, ஹைதராபாத் சஞ்சலகுடா சிறையில் அவர் அடைக்கப்பட்டார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன ரெட்டி மேல்முறையீடும் செய்து உள்ளார்.
பாதயாத்திரை
இந்நிலையில், பல்லாரி காங்கிரஸ் முன்னாள் எம்.பி., உக்ரப்பா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
ஜனார்த்தன ரெட்டி, அவரது குழுவினர் 29 லட்சம் டன் இரும்பு தாதுவை, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, அரசுக்கு 884 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தினர்.
முறைகேடு தொடர்பாக நான் 2008ல் ஒரு அறிக்கை வெளியிட்டேன். அந்த அறிக்கையை வைத்து தான், லோக் ஆயுக்தா முதற்கட்ட அறிக்கை தயார் செய்தது. சுரங்க முறைகேட்டிற்கு எதிராக, பெங்களூரில் இருந்து பல்லாரி வரை பாதயாத்திரை நடத்தி, காங்கிரஸ் நாட்டின் கவனத்தை ஈர்த்தது.
பல்லாரியில் சட்டவிரோத சுரங்க தொழில் நடக்கவில்லை என்று, முன்னாள் முதல்வர் எடியூரப்பா பொய் கூறினார். சுரங்க முறைகேடு நடந்தபோது பா.ஜ., தான் ஆட்சியில் இருந்தது. அந்த நேரத்தில் வனத்துறை அதிகாரிகளை, அமைச்சராக இருந்த ஸ்ரீராமுலு மிரட்டினார்.
கர்நாடகா - ஆந்திரா எல்லைப் பகுதியில் திருத்தம் செய்து, ஜனார்த்தன ரெட்டி சுரங்க தொழில் செய்தார்.
இப்போது அவருக்கு சி.பி.ஐ., நீதிமன்றம் சரியான தீர்ப்பு கொடுத்துள்ளது. ஊழல்வாதிகளை ஒழிப்பேன் என்று கூறும், பிரதமர் நரேந்திர மோடி, ஜனார்த்தன ரெட்டி பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
நில வருவாய் பாக்கி என்று அறிவித்து, ஜனார்த்தன ரெட்டியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்க முறைகேடு நடந்த நேரத்தில் ஆட்சியை வழிநடத்தியவர்கள், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆன்மா சாந்தி
ஜனார்த்தன ரெட்டிக்கு எதிராக போராட்டம் நடத்திய, பல்லாரி சமூக ஆர்வலர் டபல் கணேஷ் கூறியதாவது:
ஜனார்த்தன ரெட்டிக்கு ஹைதராபாத் சி.பி.ஐ., நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, என் 19 ஆண்டுகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடம்.
சட்டவிரோத சுரங்க தொழிலால் ஆந்திராவில் இருந்த என் தாத்தாவின் நிலம் பறிபோனது.
மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் திருத்தம் செய்து 4,000 ஹெக்டேர் நிலத்தை ஜனார்த்தன ரெட்டி கையகப்படுத்தினார்.
ஒபலாபுரம் சுரங்கத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, நான் அளித்த ஆவணங்களால் அந்த சுரங்க நிறுவனம் மூடப்பட்டது. இந்த தீர்ப்பின் மூலம் என் மூதாதையர்கள், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யாவின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும்.
என்னை பல வழிகளில் ஜனார்த்தன ரெட்டி துன்புறுத்தினர். என் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. என் வீட்டின் மீது தாக்குதல்கள் நடந்தன. அத்தனையும் பொறுத்துக் கொண்டேன்.
இனிமேலாவது மாநிலங்களுக்கு இடையிலான வரைப்படத்தில் உள்ள தவறுகளை அரசு சரிபார்க்க வேண்டும். அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஜனார்த்தன ரெட்டியிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெட்டி கடந்து வந்த பாதை
கனிம சுரங்க வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், 2008ல் ஜனார்த்தன ரெட்டியை பா.ஜ.,வில் இருந்து அக்கட்சி மேலிடம் நீக்கியது.
சிறையில் இருந்து அவர் ஜாமினில் வந்த பின்னரும், அவரை கட்சியில் சேர்க்கவில்லை. பல்லாரி செல்ல சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றமும் ஜனார்த்தன ரெட்டிக்கு தடை விதித்து இருந்தது.
கடந்த 2023 சட்டசபை தேர்தலுக்கு முன்பு, கல்யாண ராஜ்ய பிரகதி என்ற கட்சியை ஜனார்த்தன ரெட்டி துவக்கினார். கொப்பால், கங்காவதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
பல்லாரி நகர தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட தன் தம்பி சோமசேகர் ரெட்டியை தோற்கடிக்க, மனைவி அருணாவை ஜனார்த்தன ரெட்டி களம் இறக்கினார்.
ஓட்டுகள் சரமாரியாக பிரிந்ததால், காங்கிரசின் பரத் ரெட்டி வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலுக்கு பின், காங்கிரஸ் தலைவர்களுடன் ஜனார்த்தன ரெட்டி நெருக்கம் காட்டினார்.
குறிப்பாக ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டும் போட்டார். பின், பா.ஜ.,வில் மீண்டும் இணைந்ததால் அரசுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இதனால் ஜனார்த்தன ரெட்டியை அரசியல்ரீதியாக முடக்க, அவரது சொத்துகளை முடக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.