ADDED : ஏப் 18, 2026 05:57 AM
- நமது நிருபர் -: தொகுதி மறுவரையறை விவகாரத்தில், பார்லிமென்டில் கர்நாடகாவின் செல்வாக்கு குறையுமோ, பார்லிமென்டில் குரல் ஒலிப்பதிலும் தனக்கான நிதியை பெறுவதிலும் பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை, மாநில அரசியல்வாதிகளால் எழுப்பப்படுகிறது.
லோக்சபா மற்றும் சட்டசபைகளில், பெண்களுக்கு இடஒதுக்கீட்டை, 2029ம் ஆண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இதற்காக லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கையை, 534ல் இருந்து, 850 ஆக அதிகரிக்கும் வகையில், அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யவும் அரசு முடிவு செய்தது. இதற்காக, 131வது திருத்தம் செய்வதற்காக பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
எதிர்ப்பு தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையின் அடிப்படையில் நடக்கிறது. தென்மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி விட்டன, ஆனால், வட மாநிலங்களில் மக்கள்தொகை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மத்திய அரசின் முடிவுக்கு கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
கடந்த, 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கர்நாடகாவில், 28 லோக்சபா தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த எண்ணிக்கை தொகுதி மறுவரையறை செய்தால், 42 ஆக உயரும். பொதுவாக பார்த்தால் இது நல்லது தான். ஆனால், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, லோக்சபாவில் மாநிலத்தின் பங்கு குறையும் என்றே மதிப்பிடப்படுகிறது.
அதாவது, 28 உறுப்பினர்கள் இருக்கும் போது, லோக்சபாவில் கர்நாடகாவின் பங்களிப்பு 5.15 சதவீதம். இதுவே தொகுதி மறுவரையறைக்கு பின் கர்நாடகாவின் பங்களிப்பு, 4.94 சதவீதமாக குறைந்து விடும் என, தலைவர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இதில் எவ்வித அநீதியும் நடக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் உறுதி அளித்து உள்ளார்.
பிற மாநிலங்களின் பங்களிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான், கர்நாடகாவுக்கு என்ன பாதிப்பு என்பதை அறிந்து கொள்ள முடியும். உத்தர பிரதேசத்தின் தற்போதைய தொகுதி எண்ணிக்கை 80. இது தொகுதி மறுவரையறைக்குப் பின், 140க்கும் அதிகமாக உயரும். இதேபோல பீஹார் மாநிலத்தின் எண்ணிக்கையும், 30க்கும் அதிகமாக உயரும்.
ஓட்டு பலம் அரசியல் செல்வாக்கு என்பது ஒரு சட்டத்தை நிறைவேற்ற அல்லது ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்கத் தேவைப்படும் 'ஓட்டு பலம்'. எதிர்காலத்தில் இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், ஒரு கட்சிக்கு தென்மாநிலங்களின் ஆதரவே தேவையில்லை என்ற நிலை வரலாம்.
உத்தரபிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் வென்றாலே ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று விடும் என்ற நிலை உருவாகி விடும்.
மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதி, பெரும்பாலும் அந்த மாநிலத்தின் லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் மக்கள்தொகையையும் ஒரு காரணியாகக் கொண்டே அமைகிறது. இடங்கள் குறையும் போது நிதி ஒதுக்கீடும் பாதிக்கப்படலாம்.
மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்று நிதி ஆலோசகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
லோக்சபாவில் வட மாநிலங்களின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது, கொள்கை முடிவுகள் அனைத்தும் அந்தப் பகுதிக்குச் சாதகமாகவே எடுக்கப்பட வாய்ப்புள்ளது என, ஆளும் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
'மக்கள்தொகையை கட்டுப்படுத்தி, கல்வியிலும் பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கியதற்காக எங்களுக்குக் கிடைக்கும் தண்டனையா இது?' என தென்னிந்திய மாநிலங்கள் கேள்வி கேட்கின்றனர்.
===புல் அவுட் - 1===
அவசியமில்லை
தொகுதி மறுவரையறை என்பது, அரசியல் வசதிக்காக பிரதிநிதித்துவத்தை மாற்றியமைக்கும் ஒரு கருவியாகவோ அல்லது தொடர்பில்லாத சீர்திருத்தங்களுடன் இணைத்துத் திணிக்கப்படும் ஒன்றாகவோ ஆகிவிடக் கூடாது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய கர்நாடகா போன்ற மாநிலங்கள் இதன் மூலம் தண்டிக்கப்படக்கூடாது.
மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதை காங்கிரஸ் பல காலமாகவே தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இந்தச் சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இதை அறிவியலுக்குப் புறம்பான மற்றும் ஒருதலைப்பட்சமான பிரதிநிதித்துவ தொகுதி மறுவரையறை நடவடிக்கையுடன் தொடர்புபடுத்துவதை ஏற்க முடியாது. பெண்களுக்கான, 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தொகுதி மறுவரையறை முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
சித்தராமையா,
கர்நாடக முதல்வர்
===புல் அவுட் - 2===
தென்னிந்திய குரல்
மத்திய அரசு கொண்டு வரும், இந்த அரசியல் மறுசீரமைப்பு தென்னிந்தியாவின் குரலை நசுக்கும் முயற்சியாகும். மக்கள்தொகை அடிப்படையில், இடங்களை அதிகரிப்பது வட மாநிலங்களுக்குச் சாதகமாக அமையும் என்பதால், தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
டி.கே.சிவகுமார்,
கர்நாடக துணை முதல்வர்
======புல் அவுட் - 3======
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு, 82 என்பது மக்கள்தொகைக்கு ஏற்ப லோக்சபா தொகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான மிக முக்கியமான சட்டப்பிரிவாகும்.
1. அடிப்படை
பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, மாநிலங்களுக்கு இடையிலான லோக்சபா இட ஒதுக்கீட்டையும், ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் இருக்கும் தொகுதிகளின் எல்லைகளையும், மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று இப்பிரிவு கூறுகிறது.
2. மறுவரையறை ஆணையம்
தொகுதி மறுசீரமைப்பு பணிகளை செய்வதற்கு பார்லிமென்ட் ஒரு சட்டத்தை இயற்றி, அதன் மூலம் ஒரு மறுவரையறை ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த ஆணையத்தின் முடிவுகள் இறுதியானவை; அவற்றை எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.
3. முக்கியமான திருத்தங்கள்
தொகுதி மறுவரையறை ஏன் இவ்வளவு காலம் தள்ளிப்போனது என்பதற்கு, இப்பிரிவில் செய்யப்பட்ட இரண்டு திருத்தங்கள் தான் காரணம். அவை:
கடந்த, 1976ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் இந்திரா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட, 42-வது திருத்தத்தின்படி, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளை, 2000ம் ஆண்டு வரை மாற்றக்கூடாது என்று திருத்தம் செய்யப்பட்டது.
பின், 2001ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 84-வது திருத்தத்தின்படி, தொகுதி எண்ணிக்கை அதிகரிக்க விதிக்கப்பட்ட தடை மேலும், 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
2003ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 87வது திருத்தத்தின்படி, லோக்சபா தொகுதி எண்ணிக்கையை மாற்றாமல், தொகுதி எல்லைகளை திருத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
