/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சொந்த கட்சி துவங்கி சாதிக்க முடியாத தலைவர்கள் தனி மரம் தோப்பாகுமா?
/
சொந்த கட்சி துவங்கி சாதிக்க முடியாத தலைவர்கள் தனி மரம் தோப்பாகுமா?
சொந்த கட்சி துவங்கி சாதிக்க முடியாத தலைவர்கள் தனி மரம் தோப்பாகுமா?
சொந்த கட்சி துவங்கி சாதிக்க முடியாத தலைவர்கள் தனி மரம் தோப்பாகுமா?
ADDED : ஏப் 09, 2025 03:38 AM

- நமது நிருபர் -
பல ஆண்டுகளாக ஒரு கட்சியில் இருந்தவர்கள், திடீரென அக்கட்சியில் இருந்து விலகி, தனி கட்சி துவக்கியவர்களில் ஒரு சிலர் மட்டுமே நிலைத்துள்ளனர். இதில் ம.ஜ.த.,வை தவிர, வேறு எவரும் பலனடையவில்லை.
கர்நாடகாவில் பலர் தனிக் கட்சி துவக்கினர். ஆனால், அவர்கள் ஆரம்ப நிலையிலேயே சோபிக்க முடியாமல், தேசிய கட்சிகளுடன் தங்களையும், கட்சியையும் ஐக்கியமாக்கி கொண்டனர்.
பலம் வாய்ந்த தலைவர்களான தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா, எடியூரப்பா, தற்போதைய முதல்வராக உள்ள சித்தராமையா ஆகியோர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, தனிக்கட்சி துவக்கினர். எவ்வளவு தான் ஆதரவாளர்கள் பலமாக இருப்பது போன்று காணப்பட்டாலும், கட்சியை வழிநடத்த பொருளாதார ரீதியிலும் பலம் வேண்டும்.
தேவராஜ் அர்ஸ்
எமர்ஜென்சிக்கு பின், நாட்டின் எந்த பகுதியில் நின்றாலும் இந்திரா தோல்வி அடையும் சூழ்நிலை இருந்தபோது, கர்நாடகாவில் போட்டியிடுங்கள்; உங்களை வெற்றி பெற வைக்கிறேன் என கூறி, இந்திராவை வெற்றி பெற வைத்தவர் தேவராஜ் அர்ஸ். அதன்பின் இந்திராவுடன் ஏற்பட்ட மோதலால், கட்சியில் இருந்து விலகினார். இந்திய காங்கிரஸ் (சோஷலிஸ்ட்) கட்சியில் சேர்ந்தார். அதன் பின், 1982 ல் 'கர்நாடக கிராந்தி ரங்கா' என்ற கட்சியை துவக்கினார். ஆனால் சில நாட்களில் அவர் காலமானார்.
பங்காரப்பா
பங்காரப்பா முதல்வர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட போது, காங்கிரசுக்கு எதிராக, 'கர்நாடக காங்கிரஸ் கட்சி'யை துவக்கினார். 1996 லோக்சபா தேர்தலிலும், தன் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின், மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
சில காலம் காங்கிரசில் இருந்த அவர், மீண்டும் அக்கட்சியில் இருந்து விலகி, 'கர்நாடகா விகாஸ் கட்சி'யை துவக்கினார். அதன் பின், 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில், தோல்வியடைந்த அவர், மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
சித்தராமையா
ம.ஜ.த., தலைவர் தேவகவுடா மீது ஏற்பட்ட அதிருப்தியால், அக்கட்சியில் இருந்து விலகிய சித்தராமையா, 2002ல் ஏ.ஐ.பி.ஜே.டி., எனும் அனைத்திந்திய முற்போக்கு ஜனதா தளம் என்ற கட்சியை துவக்கினார். தன் பலத்தை காட்ட 'அஹிந்தா' கூட்டம் நடத்தினார். எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், 2004ல் காங்கிரசில் இணைந்தார்.
எடி யூரப்பா
தென் மாநிலத்தில் முதன் முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்க காரணமாக இருந்தவர் எடியூரப்பா. 2008ல் ஆட்சியை பிடித்தார். பின், அவர் மீது எழுந்த முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டால், முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. அதன் பின் கட்சியில் இருந்து விலகிய அவர், 'கே.ஜே.பி., எனும் கர்நாடக மக்கள் கட்சி'யை 2012ல் துவக்கினார்.
கடந்த 2013ல் நடந்த சட்டசபை தேர்தலில், 40 தொகுதிகளில் இவரின் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எடியூரப்பா உட்பட ஆறு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ.,வுடன், தனது கட்சியை இணைத்து கொண்டார்.
ஸ்ரீராமுலு
பல்லாரியில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தவர் ஸ்ரீராமுலு. பா.ஜ., ஆட்சி காலங்களில் அமைச்சராக இருந்தவர்.
இவரும், கட்சியின் மீது அதிருப்தியால், 2013ல் அக்கட்சியில் இருந்து விலகி, 'பி.எஸ்.ஆர்., காங்கிரஸ்' என்ற கட்சியை துவக்கினார். அந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இவரை தவிர, இவரின் கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெறவில்லை. இதனால், தன் கட்சியை, பா.ஜ.,வுடன் இணைந்து கொண்டார்.
ஜனார்த்தன ரெட்டி
பல்லாரியின் ரெட்டி சகோதரர்கள் பா.ஜ.,வில் அமைச்சர்களாக இருந்தனர். சுரங்க முறைகேட்டில் சிறைக்கு சென்ற இவர், பல ஆண்டுகளுக்கு பின், வெளியே வந்தார். எந்தவித கட்சி பணிகளிலும் ஈடுபடாமல் இருந்தார். அதன் பின், ஸ்ரீராமுலு மூலம் பா.ஜ.,வில் மீண்டும் இணைய முயற்சித்தார். ஆனால் கட்சி ஏற்கவில்லை.
இதனால், 2023ல் 'கல்யாண் ராஜ்ய பிரகதி கட்சி'யை துவக்கினார். அந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இவரின் கட்சி சார்பில் இவர் மட்டுமே வெற்றி பெற்றார். கடந்தாண்டு லோக்சபா தேர்தலை ஒட்டி, தனது கட்சியை, பா.ஜ.,வுடன் இணைத்து கொண்டார்.
உபேந்திரா
திரைப்பட இயக்குனரும், நடிகருமான உபேந்திரா, 2017 ல் உத்தம பிரஜாகியா கட்சியை துவக்கினார். 2019 லோக்சபா தேர்தலில், 28 தொகுதிகளில், இவரின் கட்சி வேட்பாளர்கள் போட்டயிட்டனர். ஆனால் இவர் போட்டியிடவில்லை. யாரும் வெற்றி பெறவில்லை.
அசோக் கேனி
திரைப்பட தயாரிப்பாளர் அசோக் கேனி, 'கர்நாடக மக்கள் கட்சி'யை துவக்கினார். இவர் மட்டுமே வெற்றி பெற்றார். அதன் பின் காங்கிரசில் இணைந்து கொண்டார்.
இவ்வாறு மாநிலத்தில் தனி கட்சி துவக்கிய பலரும், அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ள, ஏதாவது ஒரு தருணத்தில் தங்கள் கட்சியை, தேசிய கட்சிகளுடன் இணைத்து கொள்கின்றனர். அதன்பின், மீண்டும் தனி கட்சி துவக்கும் எண்ணமே அவர்களிடம் இருப்பதில்லை. அரசியலில் இருந்து ஓய்வு பெறும் வரை, அதே கட்சியில் இருக்கின்றனர்; இது தான் தற்போதைய வரலாறு.
படங்கள்: தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா, சித்தராமையா, எடியூரப்பா, ஸ்ரீராமுலு, ஜனார்த்தன ரெட்டி, உபேந்திரா, அசோக் கேனி
தேவராஜ் அர்ஸ், பங்காரப்பா, ஸ்ரீராமுலு, ஜனார்த்தன ரெட்டி, உபேந்திரா, அசோக் கேனி
- நமது நிருபர் -