/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில் கட்டணம் அடுத்த ஆண்டும் உயரும்?
/
மெட்ரோ ரயில் கட்டணம் அடுத்த ஆண்டும் உயரும்?
ADDED : செப் 13, 2025 04:53 AM
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டணம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 5 சதவீதம் வரை உயர்த்தப்படும் என, கட்டண நிர்ணய குழுவின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயிலில் தினமும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உட்பட லட்சக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க பலரும் மெட்ரோவை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரியில் ரயில் டிக்கெட் கட்டணத்தை 71 சதவீதம் வரை மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியது. இதனால் அதிகபட்ச டிக்கெட் விலையானது, 60 ரூபாயில் இருந்து 90 ரூபாயாக உயர்ந்தது. இது பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கட்டணம் உயர்த்தப்பட்டு ஏழு மாதங்கள் ஆகியும் பயணியர் புலம்பிக்கொண்டே மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். எனவே, கட்டண உயர்வு குழுவின் அறிக்கையை பொது வெளியில் வெளியிட வேண்டும் என, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தினார். இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், கட்டண நிர்ணய குழு சமர்ப்பித்த அறிக்கையை, மெட்ரோ ரயில் நிர்வாகம் பொது வெளியில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆண்டுதோறும் மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் தானியங்கி முறையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 5 சதவீதம் வரை உயர்த்தப்படும். இதன் மூலம் மெட்ரோ ரயிலின் நிதி தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மெட்ரோ டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும். இதன் மூலம் மெட்ரோ வாங்கிய கடன்கள் அடைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.