/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஓசூர் வரை செல்லுமா 'நம்ம மெட்ரோ'
/
ஓசூர் வரை செல்லுமா 'நம்ம மெட்ரோ'
ADDED : ஆக 14, 2025 03:59 AM
'இப்ப வருமோ... எப்ப வருமோ...' என்ற பாடல் வரிக்கு ஏற்ப, பெங்களூரு ஆர்.வி.ரோடு - டெல்டா எலக்ட்ரானிக்ஸ் பொம்மசந்திரா இடையிலான மஞ்சள் பாதையில் மெட்ரோ ரயில் கடந்த 10ம் தேதி துவக்கி வைக்கப்பட்டு, பெங்களூரு தெற்கு பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளது.
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். கடந்த 11ம் தேதியில் இருந்து அதிகாரபூர்வமாக மெட்ரோ ரயில் இயங்கி வருகிறது.
வயதானவர்கள் அலைகடலென மக்கள் திரண்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இத்தனைக்கும் மெட்ரோ ரயில் ஒன்றும் பெங்களூருக்கு புதிதல்ல. தென்மாநிலங்களில் மெட்ரோ ரயில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது பெங்களூரில் தான். அதுவும் கடந்த 2011ம் ஆண்டே. கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக மெட்ரோ சேவை பெங்களூரில் உள்ளது.
ஆனாலும் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா பாதையில் இயங்கும், மெட்ரோ ரயிலை மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த ரயிலில் குடும்பத்தினருடன் சென்று, மொபைல் போன்களில் 'செல்பி' எடுத்து மகிழ்கின்றனர். வயதானவர்கள் கூட இந்த ரயிலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைகின்றனர். இதற்கு காரணம் உள்ளது.
பெங்களூரு தெற்கு பகுதி என்று அழைக்கப்படும் ஜெயநகர், லால்பாக், பசவனகுடி, பி.டி.எம்., லே - அவுட், சென்ட்ரல் சில்க் போர்டு, பொம்மனஹள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி, பொம்மசந்திரா உள்ளிட்ட பகுதிகள் எந்நேரமும் பரபரப்பாக இயங்க கூடியது. நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில், பெங்களூரு தெற்கிற்கும் முக்கிய இடம் உள்ளது.
இதற்கு காரணம் பொம்மனஹள்ளி, பொம்மசந்திராவில் இயங்கும் தொழிற்பேட்டைகள், எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் இயங்கும் ஐ.டி., நிறுவனங்கள் தான். இவற்றில் பெங்களூரை சேர்ந்தவர்கள் மட்டும் வேலை பார்க்கவில்லை.
வாகனங்கள் சங்கமம் கர்நாடகாவின் அண்டை மாநிலமான தமிழகத்தின் ஓசூரில் இருந்தும், தினமும் பல ஆயிரக்கணக்கானோர் வேலைக்காக பெங்களூரு வருகின்றனர். அவர்கள், தங்கள் சொந்த வாகனத்தில் வருகின்றனர். ஏற்கனவே பெங்களூரில் வாகன எண்ணிக்கை அதிகம். ஓசூர், பெங்களூரு வாகனங்களும் சங்கமிப்பதால், ஓசூரில் இருந்து வெறும் 20 கி.மீ., துாரத்தில் உள்ள பொம்மசந்திராவில் இருந்தே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடுகிறது.
பொம்மசந்திராவில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டியை தாண்டி, சென்ட்ரல் சில்க் போர்டு, மடிவாளாவுக்கு வருவதற்குள் வாகன ஓட்டிகள் நொந்து நுாலாகி போகின்றனர். 1 கி.மீ.,யை கடக்க, இரண்டு முதல் மூன்று மணி நேரம் ஆன உதாரணம் உண்டு.
பெங்களூரு தெற்கு பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட முயற்சி தான் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையிலான 19.15 கி.மீ., மெட்ரோ ரயில் திட்டம். இந்த திட்டத்திற்கு 2016 ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 2017ம் ஆண்டில் தான் பணிகள் துவங்கப்பட்டன. 2021ல் ரயில் பாதை பணிகள் முடிந்து, ரயில் சேவை துவங்கப்படும் என்று மெட்ரோ நிறுவனம் அறிவித்தது.
இழுபறி பல காரணங்களால் குறிப்பிட்ட நேரத்திற்குள், மெட்ரோ பாதையை அமைக்க முடியவில்லை. ஒரு வழியாக மெட்ரோ சேவை துவங்கி விட்டது. ஆர்.வி.ரோட்டில் இருந்து ரயில் புறப்படும் போதே, ரயிலின் 6 பெட்டிகளும் நிரம்பி வழிகிறது. பெண்களுக்கு என்று ஒரு பெட்டி தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் யாருக்கு உதவியாக உள்ளதோ, இல்லையோ, ஓசூரில் இருந்து வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
ரயில்கள் அட்டவணை
ஆர்.வி.ரோட்டில் இருந்து பொம்மசந்திராவுக்கு முதல் ரயில், காலை 6:30 மணிக்கு துவங்குகிறது. கடைசி ரயில் இரவு 11:55 மணிக்கு புறப்படுகிறது. இதுபோல, பொம்மசந்திராவில் இருந்தும், முதல் ரயில் காலை 6:30 மணிக்கு துவங்குகிறது. கடைசி ரயில் இரவு 10:35 மணிக்கு புறப்படுகிறது.
'ரன்னிங் மூவ்மென்ட்'
ஒயிட்பீல்டு - செல்லகட்டா; மாதவாரா - சில்க் இன்ஸ்டிடியூட் வழித்தடத்தில் இயங்கும் மெட்ரோ ரயில்களில், டிஸ்பிளேயில் ரயில் செல்லும் பாதை, ரயில் நிலைய பெயர்களின் மேப் இருக்கும். ஆனால் புதிய பாதையில் ரயில் எந்த இடத்தில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை அறியும் வகையில், ரன்னிவ் மூவ்மென்ட் மேப் உள்ளது.
ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் ரயில் நிலையங்கள் பெயர் வரும். மடிக்கணினி பயன்படுத்துவோர் சார்ஜிங் செய்யும் வசதி; மொபைல் போனுக்கு யு.எஸ்.பி., பின் சார்ஜிங் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. பெண்கள் பாதுகாப்புக்காக அவசர கால எண் டிஸ்பிளேயில் வருகிறது. பெண்கள் முன்னுரிமை கொடுக்கும் வகையில், முதல் கோச் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
2வது பெரிய நெட்வொர்க்
நமது நாட்டின் பெரிய மெட்ரோ நெட்ஒர்க் ஆக டில்லி உள்ளது. அங்கு, 289 ரயில் நிலையங்கள் உள்ளன. 395 கி.மீ., துாரத்திற்கு ரயில் பயணிக்கிறது. டில்லிக்கு அடுத்தபடியாக 2வது பெரிய மெட்ரோ நெட்ஒர்க் ஆக பெங்களூரு மாறி உள்ளது. மஞ்சள் பாதையுடன் சேர்த்து, 83 ரயில் நிலையங்கள் உள்ளன. 96.1 கி.மீ., துாரத்திற்கு ரயில் பயணிக்கிறது.
தற்போது சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து விமான நிலையம் வரை 58.19 கி.மீ.,க்கும்; நாகவாரா - காளேன அக்ரஹாரா இடையில் 21.25 கி.மீ., துாரத்திற்கும் மெட்ரோ பாதை அமைக்கும் பணி நடக்கிறது.
கெம்பாபுராவில் இருந்து ஜே.பி.நகர் 4வது பேஸ் வரை 32.15 கி.மீ., துாரத்திற்கும், ஹொசஹள்ளியில் இருந்து கடபகெரே வரை 12.50 கி.மீ., துாரத்திற்கும் புதிய பாதை அமைய உள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் 220.19 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும்.
இந்த பாதையில் என்ன ஸ்பெஷல்?
செல்லகட்டா - ஒயிட்பீல்டு இடையில் இயங்கும் மெட்ரோ ரயில் 43.39 கி.மீ., துாரத்தை இணைக்கிறது. இரு முனையங்களுக்கு இடையில், 37 ரயில் நிலையங்கள் வருகின்றன. இதில், 31 ரயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும், 5 ரயில் நிலையங்கள் சுரங்கபாதையிலும் உள்ளன.
மாதவாரா - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் இயங்கும் மெட்ரோ ரயில் 33.36 கி.மீ., துாரத்தை கவர் செய்கிறது. இந்த வழித்தடத்தில் 32 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் 29 ரயில் நிலையங்கள் உயர்த்தப்பட்ட பாதையிலும், மூன்று ரயில் நிலையங்கள் சுரங்கபாதையிலும் உள்ளன.
ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா மெட்ரோ ரயில் 19.15 கி.மீ., துாரத்தை இணைக்கிறது. அனைத்து ரயில் நிலையங்களும் உயர்த்தப்பட்ட பாதையிலேயே உள்ளன. இந்த வழித்தடத்தில் ராகிகுட்டாவில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரை ஈரடுக்கு மேம்பாலம். உயர்த்தப்பட்ட மேம்பாலத்தில் மெட்ரோ ரயிலும், அதற்கு கீழ் உள்ள பாலத்தில் வாகனங்களும் செல்கின்றன. பெங்களூரில் மெட்ரோ பாதையில் ஈரடுக்கு மேம்பாலம் இருப்பது, இந்த பாதையில் மட்டும் என்பது ஸ்பெஷல்.
- நமது நிருபர் -