/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கலபுரகியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்தப்படுமா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
/
கலபுரகியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்தப்படுமா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கலபுரகியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்தப்படுமா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
கலபுரகியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்தப்படுமா? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : அக் 20, 2025 07:01 AM
கலபுரகி: 'கலபுரகியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்துவது குறித்து அரசு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தேதி, நேரம் முடிவு செய்யப்படும்' என்று கலபுரகி உயர்நீதி மன்ற கிளை அறிவித்து உள்ளது.
கர்நாடகாவில் அரசு கட்டடங்கள், பொது இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது என்று தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த வாரம் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், எந்த தனியார் அமைப்புகளுக்கும் அரசு கட்டடங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., தனது நுாற்றாண்டு விழாவை ஒட்டி, கலபுரகி மாவட்டம் சித்தாபூரில், நேற்று (அக்., 19ம் தேதி) ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்தது. இதே போன்று, தலித் அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. ஆனால், இரு அமைப்புகளுக்கும் தாசில்தார் அனுமதி மறுத்தார்.
இதை எதிர்த்து, இரு அமைப்புகளும், கர்நாடக உயர் நீதிமன்ற கலபுரகி கிளையில் மனு தாக்கல் செய்திருந்தன. இம்மனு, நேற்று முன்தினம் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வாதிட்ட வக்கீல், 'இரு அமைப்புகளுக்கும் ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே பாதையில் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்க முடியாது' என்றார். இதையடுத்து ஊர்வலம் நடத்த இரு அமைப்புகளுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது.
நேற்று ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கலபுரகி மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் அசோக் பாட்டீல், அவசர மனுவாக, அதே நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மேல்முறையீடு செய்தார். விடுமுறையாக இருந்த போதிலும், நேற்று நீதிபதி கமல் முன், இம்மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அப்போது நடந்த விவாதம்:
நீதிபதி கமல்: ஒரு அமைப்பு, ஊர்வலம் நடத்த அனுமதி பெற வேண்டுமா. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் நடத்தப்படுகிறதா. அப்படியானால் யாரிடம் அனுமதி பெற வேண்டும்.
அட்வகேட் ஜெனரல் சஷிகிரண் ஷெட்டி: பெங்களூரில் போராட்டம், ஊர்வலம், மாநாடு நடத்துவது தொடர்பாக, 2021 அக்., 29 ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த விதியை மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம். இதற்கு போலீஸ் சட்ட பிரிவுகள் 31, 35 மற்றும் 64 துணை புரிகின்றன. மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க எந்த சட்டமும் இல்லை.
பீமா ஆர்மி மற்றும் இந்திய தலித் சிறுத்தைகளும், ஆர்.எஸ்.எஸ்.,சும் ஒரே நாளில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், சட்டம் - ஒழுங்கை காரணம் காண்பித்து, கடந்த 18ம் தேதி தாசில்தார் அனுமதி மறுத்தார்.
நீதிபதி: வேறொரு நாளில் ஊர்வலம் நடத்த முடியுமா?
அட்வகேட் ஜெனரல்: நவ.,2ம் தேதி நடத்தலாம். இதற்காக குறிப்பிட்ட பாதை அடையாளம் காணப்படும்.
மனுதாரர் வக்கீல் அருண் ஷியாம்: ஏற்கனவே ஊர்வலம் செல்லும் பாதையை குறிப்பிட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளோம். இதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
அட்வகேட் ஜெனரல்: சாலைகளில் ஊர்வலம் நடத்துவதற்கு நீதிமன்றங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இருப்பினும் அரசு ஆய்வு செய்யும்.
நீதிபதி கமல்: மாவட்ட ஆட்சியர், துணை பிரிவு அதிகாரி, தாசில்தார், கலபுரகி போலீசாரிடம் ஊர்வலம் குறித்த முழு தகவல்களை மனுதாரர் அளிக்க வேண்டும். கடந்த 18ம் தேதி தாசில்தார் கேட்ட கேள்விகளுக்கும், அவர் பதிலளிக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் குறித்து அக்., 24ம் தேதிக்குள் மாநில அரசு, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே நீதிமன்றம் முடிவு செய்யும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.