/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., வந்தால் சிவகுமாருக்கு... முதல்வர் பதவியா?: 'றெக்கை' கட்டி பறக்கும் வதந்தி
/
பா.ஜ., வந்தால் சிவகுமாருக்கு... முதல்வர் பதவியா?: 'றெக்கை' கட்டி பறக்கும் வதந்தி
பா.ஜ., வந்தால் சிவகுமாருக்கு... முதல்வர் பதவியா?: 'றெக்கை' கட்டி பறக்கும் வதந்தி
பா.ஜ., வந்தால் சிவகுமாருக்கு... முதல்வர் பதவியா?: 'றெக்கை' கட்டி பறக்கும் வதந்தி
ADDED : நவ 23, 2025 04:11 AM

பெங்களூரு: பா.ஜ.,வுக்கு வந்தால் சிவகுமாருக்கு முதல்வர் பதவி அளிக்கப்படுமென்ற வதந்தி, மாநிலத்தில் 'றெக்கை' கட்டி பறக்கிறது. இதை பா.ஜ.,வை சார்ந்த மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மறுத்துள்ளார். அவர், “நாங்கள் யாரையும் ஷிண்டே ஆக்க முயற்சி செய்யவில்லை,” என, தெளிவுபடுத்தியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இவர் முதல்வர் அரியணையில் ஏறி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆட்சி அமைந்தது முதலே, ஆளுக்கு பாதி என்ற கணக்கில் ஆட்சிக்காலத்தை பகிர்ந்து கொள்வதென, சித்தராமையாவுக்கும் சிவகுமாருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால், இதைப் பற்றி இந்த நிமிடம் வரை அதிகாரப்பூர்வமாக எந்த மட்டத்திலும் அறிவிக்கவில்லை. நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது, இந்த ஒப்பந்தம் உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம் தான், காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் பிற கட்சியினருக்கும் ஏற்படுகிறது.
இதற்கிடையில், முதல்வர் பதவி கிடைக்காவிட்டால், கர்நாடகாவின் ஏக்நாத் ஷிண்டேவாக சிவகுமார் மாறுவார்; தன் ஆதரவு 50 எம்.எல்.ஏ.,க்களுடன் சித்தராமையாவின் ஆட்சியை கவிழ்ப்பார் என, சில வாரங்களாக அரசல் புரசலாக பேச்சு அடிபடுகிறது.
இதை உறுதி செய்வது போலவே சிவகுமாரின் சில நடவடிக்கைகளும் அமைந்தன. கோவை ஈஷா யோகாவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருகில் அவர் அமர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் விமர்சித்தபோது, உத்தர பிரதேச மாநிலத்தின் கும்ப மேளாவுக்கு சென்று புனித நீராடினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, பெங்களூரில் நடந்த மெட்ரோ ரயில் துவக்க நிகழ்ச்சியில், பிரதமர் மோடி அருகில் அமர்ந்தும் பேசினார்.
இதனால் அவர் பா.ஜ.,வில் இணைய உள்ளது, உண்மை தானா என்ற பேச்சு அடிபட்டது. 'நான் அசல் காங்கிரஸ்காரன். என் உடலில் ஓடுவது காங்கிரஸ் ரத்தம்' என கூறி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சிவகுமார்.
முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் இடையே 'ஆடு புலி ஆட்டம்' நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் மேலிடம் எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் சாதிக்கிறது. ஒருவேளை மேலிடத்திடம் முடிவு தனக்கு எதிராக இருந்தால், தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் பா.ஜ.,வில் இணைந்து சிவகுமார் முதல்வர் ஆவார். துணை முதல்வராக விஜயேந்திரா பதவி ஏற்பார் என்ற வதந்தி, தற்போது 'றெக்கை' கட்டி பறக்க ஆரம்பித்துள்ளது.
ஆளுங்கட்சியில் இது கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வதந்தி குறித்து மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தார்வாடில் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் பரம ஊழல்வாதிகள். அவர்களை நாங்கள் அழைத்து வந்து, முதல்வராகும் சூழ்நிலை எங்களுக்கு ஏற்படவில்லை. யாரையும் நாங்கள் ஏக்நாத் ஷிண்டே ஆக்க மாட்டோம்; அதற்காக முயற்சியும் செய்யவில்லை.
காங்கிரஸ் அரசை நாங்கள் கவிழ்க்க மாட்டோம். ஒரு கட்சியாக அவர்களை மக்கள் ஆதரித்துள்ளனர். ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தை அவர்கள் முடிக்கட்டும். ஆனால் நல்ல முறையில் முடிக்க வேண்டும். 'இண்டி' கூட்டணிக்காக முழு அர்த்தமே, ராகுலுக்கு தெரியவில்லை.
அந்த கூட்டணி இயற்கைக்கு மாறானது. சிவகுமார் சிறைக்கு சென்று, எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து உள்ளார். எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க அவர் முயற்சித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது ஒரு புறம் இருக்க, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா நேற்று திடீரென டில்லி சென்றார். பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், கர்நாடக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ் அகர்வால் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் பதவியால் ஏற்பட்ட, குழப்பம் குறித்தும் இவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
சித்தராமையா, சிவகுமார் இடையிலான மோதலால், ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டால், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அரசை அமைப்பது பற்றி, அவர் விவாதித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மக்கள் கிளர்ச்சி மாநிலத்தின் நிர்வாக இயந்திரம் சரிந்துவிட்டது. பதவிக்காக முதல்வரும், துணை முதல்வரும் சண்டை போடுகின்றனர். மூன்று நாட்களில் இந்த பிரச்னை தீராவிட்டால், கவர்னரை சந்தித்து புகார் அளிப்போம் . காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்க பயப்படுகிறது. இப்பிரச்னையில் காங்கிரஸ் மேலிடம் உடனே தலையிட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் கிளர்ச்சி ஏற்படும். சிறைக்கு சென்று எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை சிவகுமார் பெற்றது வெட்ககேடானது. --அசோக், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்

