/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எல்லாமும் நானே என நினைக்கும் முதல்வர்; எஞ்சிய 3 ஆண்டை நிறைவு செய்யுமா காங்., அரசு?
/
எல்லாமும் நானே என நினைக்கும் முதல்வர்; எஞ்சிய 3 ஆண்டை நிறைவு செய்யுமா காங்., அரசு?
எல்லாமும் நானே என நினைக்கும் முதல்வர்; எஞ்சிய 3 ஆண்டை நிறைவு செய்யுமா காங்., அரசு?
எல்லாமும் நானே என நினைக்கும் முதல்வர்; எஞ்சிய 3 ஆண்டை நிறைவு செய்யுமா காங்., அரசு?
ADDED : ஏப் 30, 2025 08:14 AM
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மே 20ம் தேதியுடன், அரசு அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆக போகிறது. அடுத்த மாதம் 21, 22ம் தேதிகளில், அரசின் இரண்டு ஆண்டு சாதனையை கொண்டாட அமைச்சர்கள் தயாராகி வந்தனர். இதற்கு சித்தராமையா, 'பிரேக்' போட்டுள்ளார்.
கொண்டாட்டங்களை தவிர்த்து பணிகளில் கவனம் செலுத்தும்படி அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். அரசு சார்பில் எந்த திட்டம் அறிமுகப்படுத்தாலும், அந்த திட்டத்தை நானே கொண்டு வந்தேன் என்று தம்பட்டம் அடிக்கும் முதல்வர், இரண்டு ஆண்டு சாதனையை கொண்டாட வேண்டாம் என்று கூறியதற்கு, சில காரணங்களும் உள்ளன.
மூடநம்பிக்கை
'முடா'வில் இருந்து முதல்வர் 14 வீட்டுமனை வாங்கிய வழக்கில், லோக் ஆயுக்தா போலீசார் நீதிமன்றத்தில், குற்றமற்றவர் என அறிக்கை சமர்ப்பித்தாலும், அந்த அறிக்கையை ஏற்காத நீதிமன்றம் மறுவிசாரணை நடத்த உத்தரவிட்டது. இதனால், எந்த நேரத்திலும் முதல்வர் பதவி சித்தராமையா கையை விட்டு போகலாம் என்று கூறப்படுகிறது.
பதவி தன்னை விட்டு போவதை முதல்வர் சுத்தமாக விரும்பவில்லை. முதல்வராக இருப்பவர் சாம்ராஜ் நகருக்கு சென்றால், அவரது பதவி பறிபோகும் என்று மூடநம்பிக்கை உள்ளது.
சித்து பிளான்
இதனால் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் சாம்ராஜ் நகருக்கு செல்வது இல்லை. ஆனால், சித்தராமையா அடிக்கடி சென்று வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி சாம்ராஜ் நகரின் ஹனுாரில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை முதலில் சாம்ராஜ் நகரில் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் சில அமைச்சர்கள் ஒப்புக் கொள்ளாததால், ஹனுாருக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
எந்த நேரத்தில் தான் அமர்ந்திருக்கும், நாற்காலியின் கால் முறியுமோ என்ற பயத்தில் இருக்கும் சித்தராமையாவுக்கு, தான் பதவியில் இல்லாவிட்டால், அரசே இருக்க கூடாது என்ற நினைப்பும் உள்ளது. இதனால் தான் ஹனுாரில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியதாகவும் பேச்சு அடிபடுகிறது.
முதல்வர் பதவியை காப்பாற்ற, ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை தாக்கல் செய்ய சித்தராமையா பிளான் போட்டார். ஆனால் அந்த அறிக்கையை அமல்படுத்தி, வேறு வழியில் லாபம் பார்க்க, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் நினைக்கிறாராம். இதனால் இந்த அறிக்கை விஷயத்திலும் தான் நினைத்ததை செய்ய முடியாமல் முதல்வர் உள்ளாராம்.
ஏழாம் பொருத்தம்
இது ஒரு பக்கம் இருந்த அமைச்சர்களை கட்டுப்பாட்டில் வைக்கவும், முதல்வர் தவறி இருக்கிறார். அமைச்சர்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது செய்கின்றனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல், சித்தராமையா விழிபிதுங்கி நிற்கிறார்.
எப்படியும் முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் என்று நினைக்கும் அமைச்சர்கள் சிலர், இப்போது இருந்தே துணை முதல்வர் சிவகுமார் பக்கம் தாவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் தான் முதல்வர் சொல்படி நடக்கவில்லை என்றாலும், முதல்வரின் உடல்நிலையும் அவரது சொல்படி கேட்கவில்லை. மூட்டு வலியால் கடுமையாக அவதிப்படுகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை, வீல்சேரில் சென்று தான் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பொதுவாக ஒரு அரசு நன்றாக செயல்பட, அரசும், கவர்னரும் ஒற்றுமையாக செல்ல வேண்டும். ஆனால் இங்கு இருவருக்கும் இடையில் ஏழாம் பொருத்தமாக உள்ளது.
இதனால் கவர்னர் விஷயத்தில் தமிழகத்தின் பாணியை முதல்வர் கடைப்பிடிக்கிறார். இதுவும் சிலருக்கு பிடிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் ஆட்சி நேராக பாதையில் செல்லாமல், தடம் மாறி, தடுமாறி செல்கிறது.
எஞ்சிய மூன்று ஆண்டு ஆட்சி காலத்தை காங்., நிறைவு செய்யுமா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
- நமது நிருபர் -