UPDATED : ஏப் 28, 2026 08:07 PM
ADDED : ஏப் 28, 2026 06:44 PM
- நமது நிருபர் -
அமைச்சரவையை மாற்றி அமைத்து, தங்களுக்கு வாய்ப்பளிக்கும்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பலர் மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால், அமைச்சரவையை மாற்றி அமைத்தால், தேன் கூட்டில் கை விட்டதை போலாகி விடும் என, காங்கிரஸ் மேலிடம் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
கடந்த, 2023 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த போது, அமைச்சர் பதவிக்காக மூத்த எம்.எல்.ஏ.,க்களும், சட்டசபைக்கு முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் பலத்த போட்டி போட்டனர்.
அப்போது, அவர்களை சமாதானம் செய்த காங்., மேலிடம், அரசின் இரண்டரை ஆண்டு பதவிக் காலம் நிறைவடைந்த பின், அமைச்சரவையை மாற்றி அமைத்து, புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக தெரிவித்தது.
அதன்படி, அரசுக்கு இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நாளில் இருந்தே, அமைச்சர் பதவிக்காக பல எம்.எல்.ஏ.,க்கள் முயற்சிக்கின்றனர்.
அரசு மூன்றாவது ஆண்டை நெருங்குகிறது. எனவே, அமைச்சரவையை மாற்றி அமைக்கும்படி நெருக்கடி கொடுக்கின்றனர். சமீபத்தில், 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு படையெடுத்தனர்.
அங்கு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பொதுச்செயலர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்து அமைச்சர் பதவி கேட்டனர். ஆனால், அவர்கள் ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் பணியில் மேலிடம் உள்ளது.
முதலில் தேர்தலை சந்திப்போம். அதன்பின் அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கலாம். பொறுமையாக இருங்கள் கூறி அனுப்பினர்.
தற்போது, ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் இன்றுடன் முடிகிறது. எனவே, அமைச்சரவையை மாற்றி அமைத்து, தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுக்கின்றனர். 40 பேர் கூட்டாக டில்லிக்கு செல்லவும் திட்டமிட்டு உள்ளனர். இம்முறை தங்களின் அமைச்சர் பதவி கனவு நிறைவேறும் என்றும், அவர்கள் நம்புகின்றனர்.
சரியாக பணியாற்றாத சில அமைச்சர்களை நீக்கி விட்டு, புதியவர்களை அமைச்சரவையில் சேர்க்க, முதல்வர் சித்தராமையாவுக்கும் விருப்பம் உள்ளது. ஏற்கனவே நீக்க வேண்டியவர்கள், சேர்க்க வேண்டியவர்களின் பட்டியலையும் தயாராக வைத்துள்ளார்.
இதற்காக டில்லிக்கும் சென்றிருந்தார். ஆனால், மேலிடத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
கர்நாடக அரசு மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளதால், அமைச்சரவையை மாற்றி அமைப்பதில் காங்கிரஸ் மேலிடமும் ஆர்வம் காட்டுகிறது. ஆனால், அமைச்சரவையை மாற்றி அமைப்பது, தேன் கூட்டில் கை விட்டது போலாகும்.
தற்போது அமைச்சரவையில் இருப்பவர்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள். தொண்டர் படை பலம், சமுதாய பலம் உள்ளவர்கள். அவர்களை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், கர்நாடக காங்கிரசில் மீண்டும் சூறாவளி ஏற்படும்.
அமைச்சர்களில் சிலர் முதல்வருக்கும், சிலர் துணை முதல்வருக்கும் நெருக்கமானவர்கள். அவர்களில் யாரை நீக்கினாலும் தலைவலிதான். யாருக்கும் அமைச்சர் பதவியை தியாகம் செய்வதில் விருப்பம் இல்லை.
பதவியை தக்க வைத்துக்கொள்ள தீவிரமாக முயற்சிக்கின்றனர். இதற்காக சமுதாய பலத்தை பயன்படுத்துகின்றனர்.
இதற்கிடையில், அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு முன், முதல்வர் மாற்றம் விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என, சிவகுமார் முரண்டு பிடிக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுமா. அல்லது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் இதே அமைச்சரவையே நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்கு இனிப்பான செய்தி கிடைக்கும் என, நம்புகின்றனர்.தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர்.
