'அன்னபாக்யா' அரிசியை விற்றால் ரேஷன் கார்டு ரத்து?
'அன்னபாக்யா' அரிசியை விற்றால் ரேஷன் கார்டு ரத்து?
ADDED : பிப் 14, 2026 04:57 AM
பெங்களூரு: 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை மற்றவருக்கு விற்பனை செய்தால், ரேஷன் கார்டுகளை ரத்து செய்ய, உணவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுத்திய, ஐந்து வாக்குறுதி திட்டங்களில், 'அன்னபாக்யா' திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு, இலவசமாக பத்து கிலோ அரிசி வழங்குவதாக கூறப்பட்டது.
ஆனால், அரிசி பற்றாக்குறை காரணமாக, ஐந்து கிலோ அரிசியும், ஐந்து கிலோ அரிசிக்கான பணமும் வழங்கப்படுகிறது.அதேநேரத்தில், 'அன்னபாக்யா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை பலர் பயன்படுத்துவது இல்லை. விற்று பணமாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் ரேஷன் கடைக்காரர்களே, அன்னபாக்யா அரிசியை பயனாளிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, அரிசி வியாபாரிகளுக்கு விற்கின்றனர். அவர்கள் இந்த அரிசியை பாலீஷ் போட்டு, உயர்தர அரிசியாக்கி அதிக விலைக்கு விற்கின்றனர்.
அரபு நாடுகளுக்கும், அன்னபாக்யா அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. யாத்கிரில் கிட்டங்கி ஒன்றில் வெளிநாட்டுக்கு அனுப்ப தயாராக வைத்திருந்த அன்னபாக்யா அரிசியை, உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தகுதியற்றவர்கள் பி.பி.எல்., கார்டு பெற்றிருப்பது, அன்னபாக்யா அரிசி தவறாக பயன்படுத்துவது குறித்து, சட்டசபையிலும் கூட எதிர்க்கட்சியினர் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இதை அரசும் தீவிரமாக கருதுகிறது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏழைகள் பசியோடு அவதிப்படக்கூடாது என்பதால், அன்னபாக்யா திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை, பயனாளிகள் பணத்துக்கு விற்கின்றனர்; இது, சரியல்ல. இதை தடுக்க அரசு, கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
அன்னபாக்யா அரிசியை பயனாளிகள் விற்றால், அவர்களின் ரேஷன் கார்டை ரத்து செய்வது குறித்தும் அரசு ஆலோசிக்கிறது. அன்னபாக்யா அரிசியை, யாரும் தவறாக பயன்படுத்த கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
