/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கு எஸ்.ஐ.டி., குழு ஐ.பி.எஸ்., சவும்யலதா விடுவிப்பா?
/
தர்மஸ்தலா வழக்கு எஸ்.ஐ.டி., குழு ஐ.பி.எஸ்., சவும்யலதா விடுவிப்பா?
தர்மஸ்தலா வழக்கு எஸ்.ஐ.டி., குழு ஐ.பி.எஸ்., சவும்யலதா விடுவிப்பா?
தர்மஸ்தலா வழக்கு எஸ்.ஐ.டி., குழு ஐ.பி.எஸ்., சவும்யலதா விடுவிப்பா?
ADDED : ஜூலை 26, 2025 04:53 AM

பெங்களூரு: ''தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., குழுவில் இருந்து, ஐ.பி.எஸ்., சவும்யலதா விடுவிக்கப்படுவார்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் ஓடும் நேத்ராவதி ஆற்றங்கரையில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்கள் புதைத்ததாக கூறப்படும் வழக்கு குறித்து விசாரிக்க, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவை, கடந்த 20ம் தேதி அரசு அமைத்தது.
உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு டி.ஜி.பி., பிரணவ் மொஹந்தி தலைமையிலான குழுவில், மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அனுசேத், சவும்யலதா, ஜிதேந்திர குமார் தயமா இடம் பிடித்தனர். தட்சிண கன்னடா, உடுப்பி, சிக்கமகளூரு மாவட்டங்களை சேர்ந்த 20 போலீஸ் அதிகாரிகளும் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
பரிந்துரை இதற்கிடையில் விசாரணை குழுவில் இருந்து தங்களை விடுவிக்கும்படி அனுசேத், சவும்யலதா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது. இதை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மறுத்தார்.
இந்நிலையில் எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்திக்கு கடிதம் எழுதிய சவும்யலதா, தனிப்பட்ட காரணங்களுக்காக, தன்னை எஸ்.ஐ.டி., குழுவில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
விசாரணை நடத்துவது தொடர்பாக, பெங்களூரு சி.ஐ.டி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கும், அவர் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவரை குழுவில் இருந்து நீக்கும்படி, உள்துறைக்கு, பிரணவ் மொஹந்தி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''தர்மஸ்தலா வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., குழுவில் இருந்து, தன்னை விடுவிக்கும்படி ஐ.பி.எஸ்., சவும்யலதா கடிதம் எழுதி இருப்பதாக, எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் கிடைக்கவில்லை.
''ஒருவேளை அவர் கடிதம் எழுதி இருந்தால், அந்த கடிதத்தை பரிசீலித்து அவர் குழுவில் இருந்து விடுவிக்கப்படுவார். புதிய அதிகாரி நியமிக்கப்படுவார் ,'' என்றார்.