ADDED : ஏப் 15, 2026 03:19 AM

ஆர்.டி.நகர்: வீடுகளில் தங்க நகைகளை திருடியவரும், அதை விலைக்கு வாங்கி அடமானம் வைத்த பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரின் ஆர்.டி.நகரில் பூட்டப்பட்ட வீடு ஒன்றில் சில நாட்களுக்கு முன், 80 கிராம் தங்கநகைகள் திருடு போயின. ஆர்.டி.நகர் போலீசார் விசாரித்தனர். நகைகளை திருடிய முதாசிர், 25, என்பவரை கைது செய்தனர். இவர் பெங்களூரின் பல இடங்களில் திருடியது, விசாரணையில் தெரிந்தது.
இவர் திருடிய நகைகளை, தபஸ்சும், 35, என்ற பெண்ணுக்கு விற்றதை ஒப்புக்கொண்டார். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது, போலியான நகைகளை கொடுத்தார்.
தபஸ்சும், முதாசிரிடம் இருந்து வாங்கிய நகைகளை போன்றே, போலியான நகைகளை தயாரித்து வைத்திருந்தார்.
போலீசார் விசாரித்த போது, உண்மையான நகைகளை மறைத்து வைத்து கொண்டு, போலியான நகைகளை காட்டி, இதைத்தான் முதாசிர் தன்னிடம் கொடுத்ததாக நாடகமாடி, போலீசாரை திசை திருப்ப முயற்சித்தார்.
அவர்கள் தங்களின் பாணியில் விசாரித்த போது, உண்மையான நகைகளை மறைத்து வைத்ததை கூறினார். 10.55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 75 கிராம் எடையுள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
