ADDED : ஜூலை 16, 2025 11:08 PM

மங்களூரு: உதவி செய்வதாக நடித்து, பெண்ணை பலாத்காரம் செய்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
தட்சிண கன்னட மாவட்டம், மங்களூரின், கங்கநாடி கிராமத்தில் தம்பதி வசிக்கின்றனர். திருமணமான சில நாட்களில் கணவரின் உண்மையான முகம் தெரிந்தது. தன் மனைவியை பலவந்தமாக, வேறு நபர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி சித்ரவதை செய்தார். அதன்படி மனைவி நெருக்கமாக இருந்ததை, கணவரே வீடியோவில் பதிவு செய்து கொண்டார்.
இதைக் காட்டி மனைவியை மிரட்டி, 'நான் கூறுவோர் அனைவருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும்' என, இம்சித்தார். அப்போது மனைவிக்கு, யார் மூலமாகவோ காபூ போலீஸ் நிலைய ஏட்டு சந்திர நாயக் அறிமுகமானார். இவரிடம் அப்பெண், தன் கணவரின் செயலை கூறி, வீடியோவை அழிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்படியே சந்திர நாயக்கும், பெண்ணின் கணவர் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை அழிக்கும்படி செய்தார். தம்பதியை சமாதானம் செய்து வைத்தார். அதன்பின் சந்திர நாயக், பெண்ணின் கணவரின் ஒத்துழைப்புடன், பெண்ணை பலாத்காரம் செய்தார்.
மனம் நொந்த அப்பெண், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டியை சந்தித்து புகார் அளித்தார். இவரது புகாரின் அடிப்படையில், கங்கநாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவானது. ஏட்டு சந்திர நாயக்கும், பெண்ணின் கணவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.