/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோழியால் சண்டை பெண் கழுத்தறுப்பு
/
கோழியால் சண்டை பெண் கழுத்தறுப்பு
ADDED : ஜூன் 06, 2025 11:27 PM
ஹாசன்: கோழியை பிடித்துவைத்ததால், அக்கம், பக்கத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிறு காரணங்களுக்காக அடிதடி நடப்பது, கொலைகள் நடப்பதும் சகஜமாகிவிட்டது. இது போன்ற சம்பவம், ஹாசனில் நேற்று நடந்தது.
ஹாசன் மாவட்டம், ஆலுார் தாலுகாவின் தாளூர் கிராமத்தில் வசிப்பவர் பூமிகா. பூமிகா குடும்பத்தினர் கோழி வளர்க்கின்றனர்.
இந்த கோழி அவ்வப்போது, இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கிரிஷ் வீட்டுக்குள் நுழைந்து அசுத்தம் செய்தது. கோழியை தங்கள் வீட்டுக்குள் விட வேண்டாம் என, கிரிஷின் தாய் பல முறை கூறியுள்ளார். இதை பூமிகா குடும்பத்தினர் பொருட்படுத்தவில்லை. இதனால், இரண்டு வீட்டினருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் நடந்துள்ளது.
நேற்று காலையிலும், கிரிஷ் வீட்டு முன் மேய்ந்த கோழி, வழக்கம் போன்று அவரது வீட்டுக்குள் நுழைந்தது. கோபமடைந்த அவரது தாய், கோழியை பிடித்து அடைத்து வைத்தார். கோழியை திறந்துவிடும்படி பூமிகா கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பின் கோழியை கிரிஷின் தாய் வெளியே திறந்துவிட்டார்.
இந்த விஷயத்தை மதியம் வீட்டுக்கு வந்த மகன் கிரிஷிடம் தாய் கூறினார். தாயுடன் சண்டை போட்டதை அறிந்த அவர், பூமிகா வீட்டுக்குச் சென்று தட்டிக் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கைகலப்பு வரை சென்றது. கோபமடைந்த கிரிஷ், தன் வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து, பூமிகாவையும், அவரை காப்பாற்ற வந்த அவரது மாமனார் ஈரய்யாவைவும் குத்தினார்.
பூமிகாவின் கழுத்து அறுபட்டது. கை, காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மாமனார் ஈரய்யாவும் காயம் அடைந்தார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
சம்பவத்துக்கு காரணமான கிரிஷ், தலைமறைவாகிவிட்டார். ஆலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.