ADDED : பிப் 26, 2026 06:24 AM
சிக்கபல்லாபூர்: சொகுசு விடுதியின் நீச்சல் குளத்தில் மூழ்கி, தொண்டு நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்தார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகாவின், குந்தலகுர்கி கிராமத்தில் வசித்தவர் ரேகா, 37. இவர் அரசு சாரா தொண்டு நிறுவனத்தில் பணியாற்றினார். நிறுவனம் சார்பில், சிந்தடபி கிராமத்தில் உள்ள சொ குசு விடுதியில், இரண்டு நாட்கள் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க ரேகாவும் வந்திருந்தார்.
நேற்று மதியம் இவர், நீச்சல் அடிப்பதற்காக நீச்சல் குளத்தில் குதித்தார். அவருக்கு நீச்சல் தெரியும். ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கினார். இவருக்கு நீச்சல் தெரியும் என்பதால், சக ஊழியர்கள் இவரை கவனிக்கவில்லை.
ஆனால், நீண்ட நேரமாக ரேகா வெளியே வராததால், சந்தேகமடைந்த ஊழியர்கள், நீரில் இறங்கி அவரை மேலே கொண்டு வந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரேகா இறந்ததை உறுதிப்படுத்தினர்.
இது குறித்து, சித்லகட்டா போலீசார் விசாரிக்கின்றனர்.
