/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடத்துநர் ஓட்டிய பி.எம்.டி.சி., பஸ் மோதி பெண் பலி
/
நடத்துநர் ஓட்டிய பி.எம்.டி.சி., பஸ் மோதி பெண் பலி
ADDED : ஜூலை 18, 2025 11:29 PM

பெங்களூரு: பி.எம்.டி.சி., பஸ்சை நடத்துநர் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரு, மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பீன்யா நோக்கி பி.எம்.டி.சி., எலக்ட்ரிக் பஸ், பயணியருடன் நேற்று காலை 9:00 மணிக்கு சென்றது. பீன்யா இரண்டாவது ஸ்டேஜுக்கு வந்து கொண்டிருந்தது. பஸ் ஓட்டுநர், பஸ்சை சாலையில் நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிக்கச் சென்றார்.
அச்சமயத்தில், நடத்துநர் ரமேஷ், பஸ்சை அருகில் இருந்த, பஸ் நிறுத்தத்தில் நிறுத்த முயன்றார். பஸ்சை ஓட்ட தெரியாமல் ஓட்டியதில், பஸ் சாலையை விட்டு விலகிச் சென்றது.
சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஐந்து பேர் மற்றும் உணவகம் மீது மோதியது. இதில், பஸ்சின் முன்புறம் சேதமடைந்தது.
பஸ் மோதியதில், வங்கியில் வேலை செய்து வந்த சுமா, 25, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாவனா, சுனிதா, கீர்த்தனா, சல்மா ஆகிய நான்கு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பீன்யா போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி, நடத்துநர் ரமேஷை கைது செய்தனர். 'பயணியரின் நலனே முக்கியம். விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தம் தெரிவிக்கிறோம்' என, பி.எம்.டி.சி., தெரிவித்துள்ளது.