/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3 குழந்தைக்கு தாயான பெண் திருமண ஆசை காட்டி மோசடி
/
3 குழந்தைக்கு தாயான பெண் திருமண ஆசை காட்டி மோசடி
ADDED : ஜூலை 16, 2025 10:58 PM
சிக்கமகளூரு: திருமணமாகி கணவர், மூன்று குழந்தைகள் இருந்தும், மாற்றுத்திறனாளி இளைஞரை ஏமாற்றிய பெண் மீது, புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோலாரை சேர்ந்தவர் நவநீதன், 24. மாற்றுத்திறனாளியான இவர், அலுவலகம் ஒன்றில் பணியாற்றுகிறார்.
ஓராண்டுக்கு முன்பு, இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம், சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரேவின், ஹொசகெரே கிராமத்தில் வசிக்கும் பெண் அறிமுகமானார். மொபைல் போனில் பேசினர். நாளடைவில் இது காதலாக மாறியது.
பெங்களூரு, மங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் இருவரும் சந்தித்து ஊரை சுற்றினர்.
அப்பெண் நவநீதனை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார். பணமும் பெற்றுக்கொண்டார்.
காதலியை சந்திக்கும் நோக்கில், வேலையை விட்டு விட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் ஹொசகெரே கிராமத்துக்கு சென்றபோது, அதிர்ச்சி காத்திருந்தது.
அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, மூன்று குழந்தைகள் இருப்பது, நவநீதனுக்கு தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த நவநீதன், சிக்கமகளூரு எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்று புகார் அளித்தார்.
அப்பெண் தன்னுடன் வந்தால், திருமணம் செய்து கொள்வதாகவும், குழந்தைகளை வளர்க்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இது தொடர்பாக, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சமூக வலைதளங்களில் அறிமுகமாகி, காதலிக்கும்போது தனிப்பட்ட விபரங்களை மூடி மறைக்கக் கூடும். இது அபாயத்தையும் ஏற்படுத்தலாம்.
நவநீதன் என்ற இளைஞருக்கு ஏற்பட்ட மோசடி, பலருக்கு எச்சரிக்கை மணியாகும். காதலிப்பவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது. அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.