ADDED : செப் 26, 2026 11:13 PM
பீன்யா: புது வீட்டில் பால் காய்ச்சுவதாக நம்ப வைத்து, பெண்ணை வரவழைத்து கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் வசிப்பவர் வரதராஜு. இவரது மனைவி சுஜாதா, 28. சில மாதங்களுக்கு முன், சுஜாதாவுக்கு போரேகவுடா, 32, என்பவர் அறிமுகமானார். அவ்வப்போது இருவரும் சந்தித்து கொண்டனர். இந்த நட்பை பயன்படுத்தி, சுஜாதாவிடம் உள்ள பணத்தை அபகரிக்க, போரேகவுடா திட்டமிட்டார். சில நாட்களுக்கு முன், சுஜாதாவிடம் 'பெங்களூரின் நாகசந்திராவில் புதிதாக வாடகைக்கு வீடு பார்த்திருக்கிறேன்; அங்கு பால் காய்ச்சுகிறேன். நீங்களும் பங்கேற்க வேண்டும்' என, அழைத்தார்.
இதை நம்பிய சுஜாதா, தன் கணவருக்கு தெரியாமல், ஒரு லட்சம் ரூபாய் எடுத்து கொண்டு, தங்க தாலிச்செயின் அணிந்த படி, நாகசந்திராவுக்கு வந்தார். அவர் வந்தவுடன் பால் பொங்க வைத்தனர்.
பின், போரேகவுடா, தன் கூட்டாளிகள் அபி, 28, மற்றும் சதீஷ், 28, உடன் சேர்ந்து சுஜாதாவின் கை, கால்களை கட்டி தாக்கினர். அவரிடமிருந்த ஒரு லட்சம் ரூபாயையும், தாலிச்செயினையும் பறித்து கொண்டு, மூவரும் தப்பியோடினர்.
ஒருவழியாக அங்கிருந்து வீடு திரும்பிய சுஜாதா, நடந்த சம்பவத்தை தன் கணவர் வரதராஜுவிடம் கூறினார். அவரும் பீன்யா போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் அளித்தார்.
போலீசாரும் விசாரித்து போரேகவுடா, அபி, சதீஷ் ஆகியோரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.
